துபாயில் இருந்து புறப்பட்ட எமிரேட்ஸ் விமானம் போர் விமானத்துடன் மோதாமல் தப்பியது..!

417

துபாயிலிருந்து புறப்பட்ட எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஒன்று வானில், போர் விமானம் ஒன்றுடன் மோதுவதில் இருந்து மயிரிழையில் தப்பித்துக் கொண்ட விபரம் தற்போது தெரியவந்துள்ளது. வெறும் 3.5 செக்கன்களில் இந்த விபத்து தடுக்கப்பட்டுள்ளது. அவ்வளவு நெருக்கமாக எமிரேட்ஸ் விமானத்தை நோக்கி போர் விமானம் வந்திருக்கிறது!

எமிரேட்ஸ் விமானத்தில் 400க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

இந்த சம்பவம் கடந்த பிப்ரவரியில் நடந்திருக்கிறது. இதுவரை பலதரப்பட்ட உள்ளக விசாரணைகள் செய்யப்பட்டு, இப்போதுதான் சம்பவம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான விஷயங்களை விசாரணை முடியுமுன் வெளியே தெரிவிப்பதில்லை.

துபாய் விமான நிலையத்தில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் போயிங் 777 விமானம், இஸ்தான்புல் நோக்கி புறப்பட்டது. அது டேக்-ஆஃப் செய்து 16 செக்கன்களில் மேலெழுந்து கொண்டிருந்த அதே நேரத்தில், அந்த வான் பகுதியில் போர் விமானம் ஒன்று அதிவேகத்தில் தாழப்பறந்து இந்த விமானம் மேலெழும் பாதையில் வந்தது.

துபாய் ஏர் ட்ராபிக் கன்ட்ரோல் டவரில் இருந்தவர்கள் எமிரேட்ஸ் விமானிக்கு, அவரது பாதையில் எதிரே போர் விமானம் வருவதை உடனே அறிவித்தனர். ஆனால், மேலெழுந்து கொண்டிருந்த நிலையில் போயிங் 777 விமானியால் அந்தக் கணத்தில் விமானத்தை திருப்ப முடியாது.

இந்த நிலையில், போர் விமானத்தின் விமானி எதிரே வந்துகொண்டிருந்த எமிரேட்ஸ் விமானத்தை கண்டவுடன் சடுதியாக தனது விமானத்தை திருப்பியதில், இரு விமானங்களும் தப்பித்தன. விமானம் திருப்பப்படாது இருந்திருந்தால், 3.5 செக்கன்களில் இரு விமானங்களும் வானில் மோதியிருக்கும்!

தற்போது விசாரணை முடிந்து General Civil Aviation Authority (GCAA) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.