என்னிடம் ஏன் பேச மறுக்கிறாய்? நண்பனின் கழுத்தை அறுத்த கல்லூரி மாணவர்!!

470

திருச்சியில்..

வேனில் கல்லூரிக்குச் சென்றுகொண்டிருந்த சமயத்தில், சக மாணவரின் கழுத்தைக் கத்தியால் அறுத்த கல்லூரி மாணவரிடம், போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.



திருச்சி மாவட்டம், முசிறி பார்வதிபுரத்தைச் சேர்ந்த 19 வயதான இளைஞர் ஒருவர், கரூர் மாவட்டம் புலியூரிலுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இன்ஜினீயரிங் மூன்றாம் ஆண்டு படித்துவருகிறார். இதேபோல், திருச்சி மாவட்டம், தொட்டியத்தைச் சேர்ந்த 21 வயதான இளைஞர் ஒருவரும், அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவருகிறார்.

இளைஞர்கள் இருவரும் கல்லூரிக்குச் சொந்தமான வாகனத்தில், தினமும் கல்லூரிக்குச் சென்று வந்துகொண்டிருக்கின்றனர். இருவரும் நெருங்கிய நண்பர்கள் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், 21 வயது மாணவரிடம் 19 வயதான மாணவர் சரிவரப் பேசாமல், அவரைத் தவிர்த்துவந்ததாகச் சொல்லப்படுகிறது.

இது குறித்து 21 வயதான அந்த மாணவர், இன்று கல்லூரிக்கு வேனில் சென்றபோது, 19 வயது மாணவரிடம், “ஏன் என்னிடம் பேசாமல், என்னைத் தவிர்க்கிறாய்?” என்று கேட்டிருக்கிறார்.

இதற்கு அந்த மாணவர் பதில் எதுவும் சொல்லாமல், தொடர்ந்து பேசாமல் மௌனம் காத்திருக்கிறார். இதனால் கோபமடைந்த 21 வயது மாணவர், தனது பேன்ட் பாக்கெட்டில் மறைத்துவைத்திருந்த சூரிக்கத்தியால், அந்த மாணவரின் கழுத்தை அறுத்திருக்கிறார்.

வலியால் துடித்த மாணவரின் அலறல் சத்தத்தைக் கேட்டு வேனில் பயணித்த சக மாணவர்கள் கூச்சலிடவே, வேன் டிரைவர் உடனடியாக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு வேனை ஓட்டிச் சென்று, அவரை சிகிச்சைக்காக அனுமதித்தார்.

காயமடைந்த மாணவருக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கே சிகிச்சையளிக்கப்பட்டு, அவருடைய கழுத்துப் பகுதியில் 12 தையல்கள் போடப்பட்டிருக்கின்றன.

இது குறித்து தகவலறிந்த குளித்தலை காவல் நிலைய போலீஸார், மாணவரின் கழுத்தை அறுத்த சக மாணவரைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், இருவரும் நண்பர்களாகப் பழகிவந்த நிலையில், ஒரு கட்டத்தில் 19 வயது மாணவர், 21 வயது மாணவரிடம் பேசாமல் தவிர்க்கவே… அந்தக் கோபத்தில் கழுத்தைக் கத்தியால் அறுத்திருப்பது தெரியவந்திருக்கிறது. அந்த மாணவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.