
இந்தியாவின் ராஜஸ்தானில், வாக்கிங் சென்ற ஒரு இளம் தம்பதியர் சுயநினைவின்றிக் கிடந்த நிலையில், அந்த இளம்பெண்ணின் நகைகள் காணாமல் போயிருந்தன. பொலிஸ் விசாரணையில், திடுக்கிடவைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராஜஸ்தானிலுள்ள ஸ்ரீ கங்காநகர் என்னுமிடத்தைச் சேர்ந்த அஞ்சு (23) என்ற பெண்ணுக்கும் ஆஷிஷ் (27) என்பவருக்கும் கடந்த அக்டோபர் மாதம் திருமணம் ஆனது.

சமீபத்தில் இருவரும் அஞ்சுவின் ஊரான ஸ்ரீ கங்காநகருக்கு வந்திருந்த நிலையில், ஜனவரி மாதம் 30ஆம் திகதி இருவரும் வாக்கிங் சென்றுள்ளனர்.
சிறிது நேரத்தில் அஞ்சுவின் குடும்பத்தினருக்கு அஞ்சுவும் அவரது கணவரும் விபத்தொன்றை சந்தித்ததாக தகவல் கிடைக்கவே, சம்பவ இடத்துக்கு விரைந்த அவர்கள், தம்பதியரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால், ஆஷிஷ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நடந்த சம்பவம் குறித்து அஞ்சுவிடம் பொலிசார் விசாரிக்க, தங்கள் இருவரையும் கார் ஒன்று மோதித்தள்ளிவிட்டுச் சென்றதாக தெரிவித்துள்ளார் அவர்.
ஆனால், அவருக்கு பெரிய அளவில் காயங்கள் எதுவும் இல்லை. பொலிசாருக்கு சந்தேகம் ஏற்படவே, மேலதிக விசாரணையைத் துவக்கியுள்ளனர்.
இதற்கிடையில், ஆஷிஷ் கழுத்து நெறித்து கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணையில், மேலும் பல திடுக்கிடவைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அஞ்சு, சஞ்சு என்ற நபருடன் ஏழு ஆண்டுகளாக பழகிவந்துள்ளார்.

அது தெரிந்தும் அஞ்சு குடும்பத்தினர் அவரை ஆஷிஷுக்கு திருமணம் செய்து வைத்ததாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். ஆக, தாய் வீட்டுக்கு போகலாம் என்று கூறி ஆஷிஷை அழைத்துவந்துள்ளார் அஞ்சு.
ஏற்கனவே தன் காதலனுடன் திட்டமிட்டபடி, இருவருமாக வாக்கிங் செல்லும்போது, புதர்களில் மறைந்திருந்த சஞ்சுவும் அவரது நண்பர்களும் ஆஷிஷைக் கொலை செய்துள்ளார்கள்.
அவர்களிடம் தன் நகைகளைக் கழற்றிக் கொடுத்துவிட்டு, சுயநினைவிழந்தது போல் நடித்துள்ளார் அஞ்சு. பொலிஸ் விசாரணையில் உண்மை தெரியவந்துள்ளது.
ராஜஸ்தானில், இந்த வழக்கு ‘தேனிலவுக் கொலை’ என்றே அழைக்கப்படும் நிலையில், அஞ்சுவுக்கு மரண தண்டனை வாங்கித்தரவேண்டும் என ஆஷிஷ் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.





