
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, வேற்றுக்கிரகவாசிகள் (Aliens) இருப்பது குறித்து தான் கூறிய கருத்துக்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா அண்மையில் யூடியூபர் பிரையன் டைலர் கோவன் (Brian Tyler Cohen) நடத்திய நேர்காணலில் கலந்துகொண்டார்.
இதன்போது கேட்கப்பட்ட விரைவான கேள்வி-பதில் பகுதியில், “ஏலியன்கள் இருப்பது உண்மையா?” என்ற கேள்விக்கு, “அவர்கள் உண்மைதான், ஆனால் நான் அவர்களைப் பார்த்ததில்லை” என்று பதிலளித்தார்.
ஒபாமாவின் இந்த ஒற்றை வரிப் பதில் உலகெங்கும் உள்ள ஊடகங்களில் வைரலாகி, அவர் ஏலியன்கள் இருப்பதை உறுதிப்படுத்திவிட்டதாகப் பெரும் விவாதம் கிளம்பியது.
மேலும், நெவாடாவில் உள்ள இரகசிய இராணுவத் தளமான ‘ஏரியா 51’இல் (Area 51) ஏலியன்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சதித் திட்டக் கோட்பாடுகள் மீண்டும் சூடுபிடித்தன.
இதனைத் தொடர்ந்து, ஒபாமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு விளக்கத்தைப் பதிவிட்டுள்ளார். அதில்,
“விரைவான கேள்வி-பதில் பகுதியில் நான் கூறிய பதில் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. புள்ளிவிவரப்படி, இந்த உலகம் மிகப் பெரியது என்பதால் எங்காவது உயிர் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம்.
ஆனால், விண்மீன் மண்டலங்களுக்கு இடையிலான தூரம் மிக அதிகம் என்பதால், அவர்கள் பூமிக்கு வந்து நம்மைச் சந்தித்திருக்க வாய்ப்பு குறைவு.
எனது ஆட்சிக் காலத்தில் வேற்றுக்கிரகவாசிகள் எங்களைச் சந்தித்ததற்கான எந்த ஆதாரத்தையும் நான் காணவில்லை, இதுவே உண்மை” என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும், ‘ஏரியா 51’ தளத்தில் ஏலியன்கள் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதையும் அவர் மறுத்துள்ளார்.
“ஜனாதிபதி ஒருவருக்குத் தெரியாமல் இவ்வளவு பெரிய இரகசியத்தைப் பாதுகாக்கும் அளவிற்கு அங்கு எந்த நிலத்தடி வசதிகளும் இல்லை” என்று அவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார்.
2013ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இரகசிய ஆவணங்களின்படி, ‘ஏரியா 51’ என்பது உளவுப் போர் விமானங்களைப் பரிசோதிக்கப் பயன்படும் ஒரு தளம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.





