கடற்கரையில் மர்மமாக உயிரிழந்த பெண் : பொலிஸார் தீவிர விசாரணை!!

40

மொரட்டுவை, கொரலவெல்ல ஜூபிலி வீதி கடற்கரை பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் மரணம் தொடர்பில் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மொரட்டுவை, கொரலவெல்ல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவரது மரணம் தொடர்பான மர்மத்தைக் கண்டறிய மொரட்டுவை பொலிஸார் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த மரணம் ஒரு திட்டமிடப்பட்ட படுகொலையா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் முதற்கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்த பெண்ணுடன் அண்மையில் தனிப்பட்ட தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூன்று பெண்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது அவர்களிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டு வருகின்றன.

மேற்படி பெண் தனிப்பட்ட குரோதம் காரணமாகக் கொலை செய்யப்பட்டாரா அல்லது கடலில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டாரா என்பது குறித்துப் பொலிஸார் பல கோணங்களில் ஆராய்ந்து வருகின்றனர்.

“மரணத்துக்கான உண்மையான காரணம் உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையின் பின்னரே உறுதிப்படுத்தப்படும்” என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மொரட்டுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.