
வவுனியா பூந்தோட்டம் பாடசாலைக்கு முன்பாக உள்ள வீட்டில் நேற்று (08.03.2026) மாலை உள்நுழைந்த குழு வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டதுடன் வீட்டை பெற்றோல் ஊற்றி தீயிட்டு எரித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்.. நேற்று மாலை அந்த பகுதியில் இளைஞர்களுக்கிடையில் முரன்பாடு ஒன்று ஏற்ப்பட்ட நிலையில் அதன் தொடர்ச்சி கைகலப்பாக மாறியுள்ளது.

இதனையடுத்து அந்தப்பகுதிக்கு வெளிஇடங்களில் இருந்து வன்முறை கும்பல் ஒன்று வாள்கள், மற்றும் பொல்லுகள் சகிதம் வருகைதந்துள்ளனர்.
அவர்கள் தாக்குதலை மேற்கொள்ள முயன்ற போது வீதியில் நின்றிருந்த இளைஞர்கள் வீட்டிற்குள் சென்று கதவை பூட்டியுள்ளார்.
இதனையடுத்து வீட்டிற்குள் உள்நுழைந்த வன்முறைக்கும்பல் வீட்டின் யன்னல்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளதுடன், கதவின் வழியாக பெற்றோல் ஊற்றி தீயிட்டு எரித்துள்ளனர்.

வீடெங்கும் தீ பரவ முற்பட்ட நிலையில் கடும் போராட்டத்திற்கு மத்தியில் அது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. அதிஸ்டவசமாக வீட்டில் இருந்தவர்கள் சிறுகாயங்களுடன் உயிர் பிழைத்தனர்.
வன்முறைக்குழு வீட்டை எரிக்கும் போது உள்ளே பெண்கள் மற்றும் சிறுவர்கள் இருந்துள்ளனர். குழந்தைகள் உள்ளதால் எரிக்க வேண்டாம் என்று அவர்கள் அவலக்குரல் எழுப்பியபோதும் வன்முறைகுழு. அதனை பொருட்படுத்தாமல் கொழுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றது.
இதேவேளை குறித்த சம்பவத்தில் காயமடைந்த இருவர் வவுனியா பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. சம்பவ இடத்திற்கு வருகைதந்த வவுனியா தலைமை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை தீயை அணைப்பதற்காக மாநகரசபையின் தீயணைப்பு பிரிவின் உதவியும் கோரப்பட்டு தீயணைப்பு வாகனமும் வருகைதந்திருந்தது.





