
தனது பெற்றோரின் தொல்லையைத் தாங்க முடியாமல், மொட்டையடித்துக் கொண்டு இளம்பெண் ஒருவர் அதிர்ச்சியளித்துள்ளார். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தனது பெற்றோர், தன்னை சீக்கிரம் திருமணம் செய்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தி தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாக கூறி, இளம்பெண் ஒருவர் தனது நீண்ட கூந்தலை தானே மொட்டை அடித்துக் கொண்ட சம்பவம் பெண்கள் எதிர்கொள்ளும் திருமண அழுத்தம் குறித்து மீண்டும் பெரிய விவாதத்தை எழுப்பியுள்ளது.
பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கை முடிவுகள் குறித்து சமூகத்தில் நிலவும் பார்வையும் கேள்விக்குறியாகியுள்ளது. இது குறித்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிகமாக பகிரப்படும் அந்த வீடியோவில்,
தனது கூந்தலை மொட்டை அடிக்கும் போது இளம்பெண் மனஉணர்ச்சியுடன் தனது கருத்துக்கள் குறித்து பேசுகிறார். தனது கூந்தலை மிகவும் நேசிப்பதாக கூறிய அவர், சமூகமும் குடும்பமும் அமைதியாக வாழ விடவில்லை .
ஆண்கள் தங்கள் விருப்பப்படி வாழ்க்கை முடிவுகளை எடுத்தால் அது ஏற்றுக்கொள்ளப்படுகிறது; ஆனால் பெண்கள் அதே முடிவுகளை எடுத்தால் ஏன் சமூகம் வேறுபட்ட பார்வையில் பார்க்கிறது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தான் திருமணத்திற்கு தயாராக இல்லை என்பதை வெளிப்படையாக தெரிவிக்கவும், தொடர்ந்து ஏற்பட்ட மன அழுத்தத்திலிருந்து விடுபடவும் தான் இந்த முடிவை எடுத்ததாக அந்த இளம்பெண் கூறியுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகளை உருவாக்கியுள்ளது. சிலர் விமர்சித்தாலும், பலர் பெண்களின் தனிநபர் சுதந்திரத்தை ஆதரித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.





