சக மாணவனை இரும்புக் கம்பியால் அடித்து கொலை செய்த 9ம் வகுப்பு மாணவன்!!

23

கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி விடுதியில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறு கொடூர தாக்குதலாக மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குருகல் இன்டர்நேஷனல் என்ற பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்த மாணவன், சக மாணவர்களுடன் ஏற்பட்ட தகராறால் ஆத்திரமடைந்ததாக கூறப்படுகிறது.

இரவு நேரத்தில் மாணவர்கள் அனைவரும் தங்கள் அறைகளில் தூங்கிக் கொண்டிருந்தபோது அந்த மாணவன் இரும்புக் கம்பியுடன் சென்று சரமாரியாக தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் 8 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். விடுதி வார்டனையும் தாக்கிவிட்டு அந்த மாணவன் அங்கிருந்து தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது.

காயமடைந்த மாணவர்கள் பெல்லாரியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவருக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மற்ற மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மாணவனை தீவிரமாக தேடி வருகின்றனர்.