இடது காலுக்கு பதில் வலது காலில் மாற்றி அறுவை சிகிச்சை!!

19

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியில் உள்ள மதுரா தாஸ் மாத்தூர் (MDM) அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் கவனக்குறைவால் 66 வயது மூதாட்டிக்குத் தவறான காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சண்டையினால் ஏற்பட்ட காயம் காரணமாகச் சம்பா தேவி என்ற அந்த மூதாட்டியின் இரண்டு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு மாவுக்கட்டு போடப்பட்டிருந்தது.

அவருக்கு இடது காலில் அறுவை சிகிச்சை செய்யத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், டாக்டர்கள் தவறுதலாக அவரது வலது காலில் அறுவை சிகிச்சையைச் செய்துள்ளனர்.

அறுவை சிகிச்சை முடிந்த பின்னரே, தவறு நடந்திருப்பதை உணர்ந்த உறவினர்கள் மருத்துவமனையில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர்.

முதலில் மூதாட்டிக்கு இரண்டு கால்களிலும் சிகிச்சை தேவைப்படுவதால் தான் வலது காலில் சிகிச்சை அளித்ததாகக் கூறி டாக்டர்கள் சமாளிக்க முயன்றனர்.

இருப்பினும், முறையான வழிகாட்டுதல்களைப் (SOP) பின்பற்றாமல் இந்தத் தவறு நடந்தது விசாரணையில் அம்பலமானது.

இந்த விவகாரம் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவியது.

இந்தக் கொடூரமான மருத்துவ அலட்சியம் குறித்து விசாரணை நடத்த மருத்துவமனை நிர்வாகம் ஒரு சிறப்புக் குழுவை அமைத்தது.

அந்த விசாரணைக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில், அறுவை சிகிச்சையை மேற்கொண்ட உதவிப் பேராசிரியர் அந்தஸ்தில் உள்ள டாக்டர் சவுத்ரி என்பவர் உடனடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

மேலும், அவர் ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவக் கல்வித் துறைக்கு மாற்றப்பட்டு மேல் நடவடிக்கைக்காகக் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அரசு மருத்துவமனையில் நடந்த இந்தச் சம்பவம் நோயாளிகளின் பாதுகாப்பு குறித்த பெரும் கேள்விக்குறியை எழுப்பியுள்ளது.