கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக பலி!!

14

சேலம் மாவட்டம் செம்மாண்டம்பட்டியைச் சேர்ந்த தனபால் (37), தனது மனைவி மேனகா, மகள், மகன் மற்றும் உறவினருடன் வால்பாறைக்குச் சுற்றுலா சென்றுவிட்டு நேற்று மாலை காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

பொள்ளாச்சி – பல்லடம் சாலையில் நெகமம் அருகே கார் வந்து கொண்டிருந்தபோது, எதிரே சோயா லோடு ஏற்றி வந்த லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் மீது பயங்கரமாக மோதியது.

இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியதுடன், இன்பச் சுற்றுலா சென்ற குடும்பத்திற்கு அதுவே கடைசிப் பயணமாக அமைந்தது.

இந்த கோர விபத்தில் காரை ஓட்டி வந்த தனபால், அவரது மனைவி மேனகா (35) மற்றும் உறவினர் சினேகா (23) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிர் இழந்தனர்.

பலத்த காயமடைந்த மகள் அனுஷ்கா (17), மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இவர்களது 12 வயது மகன் சுர்ஜித் மட்டும் உயிருக்குப் போராடிய நிலையில் மீட்கப்பட்டு, தற்போது கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த நெகமம் போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரான கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சரவணன் (39) என்பவரைப் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுற்றுலா முடிந்து மகிழ்ச்சியுடன் வீடு திரும்பிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சேலம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.