வவுனியாவில் பரபரப்பான துடுப்பாட்டப் போட்டியில் சிங்கர் பினான்ஸ் அணியை வீழ்த்தி கொமர்சல் கிரடிட் அணி சாம்பியன்!!

176

வவுனியாவில் உள்ளூர் நிறுவனங்களுக்கு இடையே விளையாட்டுத் திறனையும், சுமுகமான உறவையும் மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “பெரும் சமர்” (Big Match) துடுப்பாட்டப் போட்டி மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

வவுனியாவின் முன்னணி நிதி நிறுவனங்களான கொமர்சல் கிரடிட் (Commercial Credit) வவுனியா கிளை மற்றும் சிங்கர் பினான்ஸ் (Singer Finance) வவுனியா கிளை ஆகிய அணிகள் இந்தத் தொடரில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத வகையில் அமைக்கப்பட்ட இந்தத் தொடர் 10 பந்து பரிமாற்றங்கள் (10 Overs) கொண்ட மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் போட்டி , வெற்றியாளரைத் தீர்மானிக்க மூன்று சுற்றுப்போட்டிகள் (3 Match Series) ஆகிய விதிகளின் அடிப்படையில் நடைபெற்றது.

நாணயச் சுழற்சியில் இருந்து ஆட்டத்தின் இறுதிப் பந்து வரை இரு அணிகளுமே வெற்றிக்காகக் கடுமையாகப் போராடின. அதிரடி ஓட்டக் குவிப்புகள், துல்லியமான பந்துவீச்சு என மைதானம் முழுவதும் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமநிலை வகித்ததால், இறுதிப் போட்டியே தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் தீர்க்கமான ஆட்டமாக அமைந்தது.

ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இறுதிச் சுற்றில், கொமர்சல் கிரடிட் வவுனியா கிளை அணி தனது அபாரமான துடுப்பாட்டம் மற்றும் நேர்த்தியான களத்தடுப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சிங்கர் பினான்ஸ் அணியின் சவாலை முறியடித்து, கொமர்சல் கிரடிட் அணி இறுதிப் போட்டியில் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தது.

இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரைத் தன்வசப்படுத்தி கொமர்சல் கிரடிட் கிண்ணத்தினை (Commercial Credit) கொமர்சல் கிரடிட் வவுனியா கிளை அணி பெருமையோடு தட்டிச் சென்றது.

போட்டியின் நிறைவில் வெற்றியீட்டிய அணிக்கு சாம்பியன் கிண்ணமும், சிறப்பான திறமைகளை வெளிப்படுத்திய வீரர்களுக்கு விசேட பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன. விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் இரு நிறுவனங்களின் ஊழியர்கள் எனப் பெருந்திரளானோர் திரண்டு வந்து வீரர்களை உற்சாகப்படுத்தினர்.