கர்ப்பிணி மனைவி இறந்த சோகத்தில் கணவன் எடுத்த விபரீத முடிவு!!

15

கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள எடத்துவா பகுதியைச் சேர்ந்த சானு குட்டன் (30 வயது) என்பவருக்கும் ஹரிஷ்மா (27 வயது) என்ற பெண்ணுக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

திருமணமான 3 மாதங்களில் சானு குட்டன் வேலைக்காகத் தோஹா நாட்டுக்குச் சென்ற நிலையில், கர்ப்பிணியாக இருந்த ஹரிஷ்மா மாவேலிக்கரை உம்பர் நாடு பகுதியில் உள்ள தனது வீட்டில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வெளிநாட்டில் இருந்த சானு குட்டனுக்கு இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டதும், அவர் உடனடியாகத் தனது சொந்த ஊருக்குத் திரும்புவதாக உறவினர்களிடம் கூறிவிட்டுத் தோஹாவிலிருந்து விமானம் மூலம் பெங்களூரு வந்து இறங்கியுள்ளார்.

பெங்களூருவிலிருந்து நெடும்பாசேரி விமான நிலையம் வர வேண்டிய சானு குட்டன் குறிப்பிட்ட நேரத்திற்கு வராததால் பதற்றமடைந்த உறவினர்கள் போலீசில் புகார் அளித்துத் தேடத் தொடங்கினர்.

போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், பெங்களூருவில் உள்ள ஒரு விடுதியில் சானு குட்டன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது முறைப்படி உறுதி செய்யப்பட்டது.

மனைவி இறந்த துக்கம் தாளாமல் அவரும் தனது உயிரை மாய்த்துக் கொண்டதாகப் போலீசார் தெரிவித்துள்ள நிலையில், ஹரிஷ்மாவின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது மர்மமாக உள்ளதால் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.