வவுனியாவில் 67 பேருக்கு டெங்கு தொற்று : கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை!!

125

வவுனியா மாவட்டத்தில் 67 பேருக்கு டெங்கு தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும், பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பிற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய குறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டங்கள் குறித்தான கலந்துரையாடலொன்று, கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் இன்று (16) வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், தற்போது வவுனியா மாவட்டத்தில் 67 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், வவுனியா நகரத்தை சூழவுள்ள பகுதிகளில் டெங்கு நோய் வேகமாக பரவி வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

முறையற்ற கழிவகற்றல், நீர் தேங்கி காணப்படல் மற்றும் டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு ஏற்ற வாழ்விடங்கள் நகரத்தில் காணப்படுகின்றமை போன்ற காரணங்களால் வவுனியா மாவட்டத்தில் டெங்கு அபாயம் அதிகரித்துள்ளதாக இக்கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டது.

இதற்கமைய அரச நிறுவனங்கள், பாடசாலைகள், மத ஸ்தலங்கள் மற்றும் பொது இடங்களை உள்ளடக்கும் வகையில் பல்வேறு டெங்கு ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு இங்கு தீர்மானிக்கப்பட்டது.

வவுனியா தெற்கு, வெண்கலசெட்டிகுளம் மற்றும் வவுனியா ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் டெங்கு நோய் பரவலில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் சுட்டிக்காட்டினர் என மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட செயலாளர் பி.ஏ.சரத்சந்திர, மேலதிக மாவட்ட செயலாளர் நா.கமலதாசன் ஆகியோர் உட்பட முப்படை அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.