
கொழும்பில் பெரிய அளவிலான போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த தொட்டலங்க பொட்டி எனப்படும் பெண், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் வர்த்தகம் மூலம் முறையற்ற விதத்தில் சுமார் எட்டுக் கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் மற்றும் சொத்துக்களைச் சம்பாதித்தமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த பெண்ணிடம் உள்ள சொத்துக்களில் இதுவரை 8.25 கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவரிடம் உள்ள சொத்துக்களின் பெறுமதி மேலும் பல கோடி ரூபாய் இருக்கும் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொட்டலங்க பொட்டி வசம் உள்ள ஏனைய சொத்துக்களைக் கண்டுபிடிப்பதற்காக விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
கொழும்பின் பிரதான போதைப்பொருள் வர்த்தகர்களில் ஒருவரான தொட்டலங்க பொட்டி, பொலிஸாரை ஏமாற்றி நீண்ட காலமாக தலைமறைவாக செயற்பட்டுள்ளார்.
போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த அவரிடம் உள்ள சொத்துக்கள் தொடர்பில் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு சில மாதங்களுக்கு முன்பிருந்து விரிவான விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.
அதற்கமைய, போதைப்பொருள் வர்த்தகம் மூலம் தொட்டலங்க பொட்டி ஈட்டிய பணத்தைச் செலவிட்டு கொள்வனவு செய்திருந்த வீடுகள், கட்டடங்கள், கடை அறைகள், தங்க நகைகள் உள்ளிட்ட பல பெறுமதியான சொத்துக்களைச் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு கைப்பற்றியுள்ளது.
இது தவிர, அவருக்குச் சொந்தமான பல வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ள பணத்தினையும் புலனாய்வாளர்களால் கண்டுபிடித்துள்ளனர். தொட்டலங்க பொட்டி இன்று நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளார்.





