கொழும்பில் பட்டப்பகலில் பட்டதாரி யுவதியை கடத்திய காதலன் : பொலிசார் தீவிர விசாரணை!!

86

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக சென்ற 26 வயதான யுவதியொருவரை கடத்திச்சென்ற காதலனை கைது செய்ய இரண்டு பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

சந்தேகநபரான, அப்பெண்ணின் காதலனை கைது செய்வதற்காக, நாரஹேன்பிட்ட மற்றும் குருந்துவத்த பொலிஸ் நிலையங்களால் நேற்று (30 ஆம் திகதி) இரண்டு குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

சனிக்கிழமை (29) பிற்பகல் சுமார் 1.30 மணியளவில் யுவதி ஒருவர் காரில் கடத்திச் செல்லப்படுவதாக பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்கு தகவல் கிடைத்த நிலையில் நாரஹேன்பிட்டி பொலிஸார் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதன்படி, நாரஹேன்பிட்டியிலிருந்து நாவல நோக்கிப் பயணித்த காரை நிறுத்துமாறு பொலிஸார் உத்தரவிட்ட போதிலும், சாரதி அதனை நிறுத்தாமல் தொடர்ந்து செலுத்திச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், உத்தரவையும் மீறி கார் தொடர்ந்து சென்றதால், பொலிஸார் காரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி அதனை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதன்போது காரை செலுத்திய நபர் வாகனத்தை கைவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்ற நிலையில், பொலிஸார் மேற்கொண்ட சோதனையில், காருக்குள் 26 வயதான யுவதி ஒருவர் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஸ்ரீபாலி பீடத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக தனது குடும்பத்தினருடன் மாநாட்டு மண்டபத்திற்கு வந்திருந்தபோதே யுவதியின் காதலனால் கடத்தப்பட்டமை தெரியவந்திருந்தது.

யுவதி தனது காதலனுக்குத் தெரிவிக்காமல் பட்டமளிப்பு விழாவிற்கு வந்திருந்த நிலையில், அவர் கடத்தப்படுவதாக யுவதியின் தந்தை பொலிஸாரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும், தப்பிச்சென்ற சந்தேகநபர் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை தொடர்பான குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர் எனவும், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி, சந்தேகநபரை , கைது செய்வதற்காக, நாரஹேன்பிட்ட மற்றும் குருந்துவத்த பொலிஸ் நிலையங்களால் நேற்று (30 ஆம் திகதி) இரண்டு குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பாக குருந்துவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.