
கேரளாவை சேர்ந்த இரட்டை சகோதரிகள் ஒரே நாளில் திருமணம் செய்ததோடு, ஒரே நாளில் குழந்தை பெற்றுக்கொண்ட அதிசய சம்பவம் நிகழ்ந்துள்ளது. கேரளாவின் கோட்டயத்தில், 1997 நவம்பர் 17 அன்று சி.பி. அனில்குமார் மற்றும் சூர்யா அனில்குமார் தம்பதிக்கு பிறந்த இரட்டையர்கள் அதிரா மற்றும் ஆர்யா ஆவார்கள்.
இவர்கள் ஒன்றாக பிறந்ததோடு, தங்களது ஆரம்ப கல்வி முதல் தொழில்முறை வாழ்க்கை வரை ஒன்றாகவே பயணித்துள்ளனர். இருவரும் செவிலியர் படிப்பை தேர்வு செய்து, ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ டி.ஆர்.டி.ஓ மருத்துவமனையில் ஒன்றாக பணியாற்றி வந்துள்ளனர்.
அதன் பின்னர், 2022 ஏப்ரல் 17 அன்று அதிரா, கருவட்டாவைச் சேர்ந்த அகிலேஷ் ஸ்ரீகுமார் என்பவரையும், ஆர்யா, மாவேலிக்கராவைச் சேர்ந்த சிரன் மோகனன் நாயர் என்பவரையும் திருமணம் செய்துள்ளார்.
திருமணத்திற்கு பின்னர் இருவரும் தங்களது கணவர்களுடன் மத்திய கிழக்கு நாடுகளுக்குக் குடிபெயர்ந்தனர். அதிரா கத்தாரில் உள்ள தோஹா கிளினிக் மருத்துவமனையிலும், ஆர்யா ஓமானில் உள்ள பத்ர் அல் சமா மருத்துவமனையிலும் தங்களது செவிலியர் பணியை தொடர்ந்தனர்.
திருமணத்திற்கு பின்னர், வேறு வேறு நாடுகளில் வசித்து வந்தாலும், இரட்டையர்களான இருவருக்கும் ஒரே நாளில் குழந்தை பிறந்துள்ளது.
2026 ஆகஸ்ட் 9 அன்று கத்தாரில் உள்ள ஆயிஷா பின்த் ஹமாத் மருத்துவமனையில் அதிராவும், ஓமானில் உள்ள தான் பணிபுரியும் பத்ர் அல் சமா மருத்துவமனையில் ஆர்யாவும் தங்களது பெண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர்.
20 செப்டம்பர் 2026 அன்று இரு குடும்பத்தினரும் தங்களது குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் விழாவை நடத்தியுள்ளனர். அகிலேஷ் ஸ்ரீகுமார் அதிரா தம்பதி தங்களது மகளுக்கு நிவேத்யா அகிலேஷ் எனவும், சிரன் மோகனன் நாயர் ஆர்யா தம்பதி தங்களது மகளுக்கு நிதாரா சிரான் எனவும் பெயர் சூட்டியுள்ளனர்.





