நகைக்கடையில் நூதன மோசடி : பொலிஸார் தீவிர விசாரணை!!

34

களுத்துறை பேருவளை நகரில் உள்ள நகைக்கடை ஒன்றில், போலி ஆன்லைன் பணப்பரிமாற்ற ரசீதைக் காட்டி 1 இலட்சத்து 7 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளைத் திருடிச் சென்ற சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் (19.10.2026) இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தனது ஏழு வயது மகள் பரீட்சையில் சிறப்பாகச் சித்தியடைந்ததற்குப் பரிசாகத் தங்கக் காதணிகளை வாங்குவதாகக் கூறியே சந்தேகநபர் நகைக்கடைக்கு வந்துள்ளார்.

முழுமையாகக் கருப்பு நிற ஆடைகளை அணிந்திருந்த அவர், தங்க நகைகளைத் தெரிவுசெய்யும்போது அவற்றைப் பற்றித் தனக்கு அதிகம் தெரியாது எனக் கூறி, கடையிலிருந்த மற்றொரு பெண்ணின் உதவியையும் நாடியுள்ளார்.

இதன்போது, வங்கி அட்டை மூலம் பணம் செலுத்த முடியுமா என சந்தேகநபர் கடை உரிமையாளரிடம் கேட்டுள்ளார். கடையில் வங்கி அட்டைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை எனத் தெரிவித்த உரிமையாளர், ஆன்லைன் மூலம் தனது மகனின் வங்கிக் கணக்கிற்குப் பணத்தை அனுப்புமாறு கூறியுள்ளார்.

இதனையடுத்து, கடையில் அப்போது இல்லாத தனது மகனைத் தொலைபேசியில் தொடர்புகொண்ட கடை உரிமையாளர், சந்தேகநபருக்கு வங்கிக் கணக்கு விபரங்களை வழங்கியுள்ளார்.

சில நிமிடங்களின் பின்னர், சந்தேகநபர் தனது கைப்பேசியில் இருந்த போலியான பணப்பரிமாற்ற ரசீதைக் கடை உரிமையாளரிடம் காட்டி, பணம் செலுத்தப்பட்டுவிட்டதாகக் கூறியுள்ளார். பின்னர், தங்க நகைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

பணம் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதைத் தனது மகனிடம் கடை உரிமையாளர் விசாரித்தபோதே, பணம் கிடைக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, தாம் மோசடிக்கு உள்ளானதை உணர்ந்த கடை உரிமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பான பாதுகாப்புக் கமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, கருப்பு நிற ஆடைகளை அணிந்த சந்தேகநபர் தங்க நகைகளைத் தெரிவுசெய்வதும், கைப்பேசியில் போலியான ரசீதைக் காட்டுவதும் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த காட்சிகளின் அடிப்படையில் சந்தேகநபரை அடையாளம் காணவும், அவரைக் கைது செய்யவும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.