வவுனியாவில் யானை தாக்குதலில் மாடு மேய்க்கச் சென்றவர் உயிரிழப்பு!!

132

வவுனியா, நெடுங்கேணி – பெரியமடுப் பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்காகிப் படுகாயமடைந்த நபர் ஒருவர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் நெடுங்கேணிப் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர் வழமைபோன்று ஏனையவர்களுடன் இணைந்து பெரியமடு பகுதியில் மாடு மேய்க்கச் சென்றுள்ளார். இதன்போது எதிர்பாராத விதமாக அப்பகுதியில் நடமாடிய ஒற்றை யானையின் தாக்குதலுக்கு இலக்காகிப் படுகாயமடைந்துள்ளார்.

இதனையடுத்து, அவருடன் சென்றவர்கள் அவரை மீட்டு உடனடியாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, பெரியமடு மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமப் பகுதிகளில் தொடர்ச்சியாக நடமாடி வரும் குறிப்பிட்ட ஒற்றை யானையின் தாக்குதல்களினாலேயே இவ்வாறான மனித உயிரிழப்புகள் இடம்பெற்று வருவதாகப் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கிராம மக்களின் அன்றாட வாழ்வாதார நடவடிக்கைகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள இந்த யானையின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தி, மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடரும் யானை – மனித மோதல்களால் கிராமப்புற மக்களின் உயிருக்கும் வாழ்வாதாரத்திற்கும் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலைத் தடுக்க உரிய தரப்பினர் விரைந்து செயற்பட வேண்டுமெனவும் மக்கள் வலியுறுத்துகின்றனர்.