வவுனியா குருமன்காட்டில் மாநகரசபை ஊழியர் மீது பெண் தாக்குதல்!!

108

வவுனியா, குருமன்காடு பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த மாநகரசபை ஊழியர் ஒருவர் மீது பெண் ஒருவர் தாக்குதல் நடத்தியதில், காயமடைந்த ஊழியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் தாக்குதலை நடத்திய பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (11.11) இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

குருமன்காடு பகுதியில் அமைந்துள்ள வியாபார நிலையம் ஒன்றுக்கு முன்பாக, வீதியை மறைத்தவாறு வைக்கப்பட்டிருந்த மரக்கறி மற்றும் பழங்களை அகற்றும் நடவடிக்கையில் வவுனியா மாநகரசபை ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது, குறித்த வியாபார நிலையத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் மாநகரசபை ஊழியருடன் தர்க்கத்தில் ஈடுபட்டு, அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

இத்தாக்குதலில் காயமடைந்த மாநகரசபை ஊழியர் உடனடியாக சிகிச்சைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து, தாக்குதலை மேற்கொண்ட பெண்ணை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.