
புதிய இணைப்பு : இலங்கையின் வடகிழக்குப் பகுதியில், வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது.
நேற்று (15) இரவு 11.30 மணியளவில், இந்த தொகுதி திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 640 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டிருந்தது.
இந்த தொகுதியானது இலங்கையை விட்டு மேலும் விலகிச்செல்லும் எனவும், இன்று (நவம்பர் 16) மாலை தெற்கு மற்றும் அதனை அண்டிய மேற்கு-மத்திய வங்காள விரிகுடா பகுதியில் ‘புயலாக’ (Cyclonic Storm) வலுவடைய அதிக வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், நவம்பர் 17ஆம் திகதியளவில் மேற்கு-மத்திய வங்காள விரிகுடா பகுதியில் ‘கடும் புயலாக’ (Severe Cyclonic Storm) மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக, இன்று (16) முதல் நாடு முழுவதும் நிலவும் மழையுடனான வானிலை படிப்படியாகக் குறையும் என்றும், பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலவக்கூடும் என சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும். ஊவா மாகாணத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் சீரான வறண்ட வானிலை நிலவும். இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக ஏற்படக்கூடிய உள்ளூர் ரீதியிலான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அதிகாலை வேளையில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பனிமூட்டமான நிலை காணப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, 05 முதல் 15 வடக்கு அட்சரேகைகள் மற்றும் 80 முதல் 90 கிழக்கு தீர்க்கரேகைகளுக்கு இடைப்பட்ட கடல் பகுதிகளிலும், காங்கேசன்துறை முதல் திருகோணமலை வரையிலும்,
பொத்துவில் முதல் ஹம்பாந்தோட்டை வரையிலும் உள்ள கடலோரப் பகுதிகளிலும் மறு அறிவிப்பு வரும் வரை கடற்றொழில் மற்றும் கப்பல் போக்குவரத்து நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு : இலங்கைக்கு கிழக்கே வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த தாழமுக்கம் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, திருகோணமலையிலிருந்து சுமார் 630 கி.மீ. வடகிழக்கில் நிலைகொண்டுள்ளது.
இதன் காரணமாக, இன்று(16.11.2026) மாலை புயலாக வலுப்பெறக்கூடும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது. அதன் பின்னர், நவம்பர் 17ஆம் திகதி தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக, இன்று நாடு முழுவதும் மேகமூட்டமான வானிலை நிலவும் என்றும் அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. இதன்படி, வடக்கு, கிழக்கு, வடமத்திய, மேல், சபரகமுவ, வடமேல் மாகாணங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை, மின்னல் மற்றும் தற்காலிக பலத்த காற்று வீசக்கூடும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில், இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னலின்போது அவதானமாக இருக்குமாறும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.





