2 கோடி காப்பீடு பணத்திற்காக கணவருக்கு விஷம் வைத்த பெண்!!

6

ரூ.2 கோடி காப்பீடு பணத்திற்காக கணவருக்கு விஷம் வைத்து கொல்ல முயற்சித்த குற்றச்சாட்டில் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத்தை சேர்ந்த சுஷில் பட்நகர் என்பவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உடல்நிலை மோசமடைந்து வந்துள்ளது.

இதனையடுத்து மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மேற்கொண்டதில், அவரது இரத்தத்தில் ஈயத்தின் அளவு வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருப்பது மருத்துவ அறிக்கையில் தெரிய வந்தது. அவரது மனைவியின் குடும்பம் ஈயம் பயன்படுத்தப்படும் நகை வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதை அறிந்த மருத்துவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு, சுஷிலை எச்சரித்தனர்.

மனைவியிடமிருந்து சுமார் ஒரு மாதம் பிரிந்து வாழ்ந்த பிறகு, சுஷிலுக்கு மேற்கொள்ளப்பட்ட மற்றொரு மருத்துவப் பரிசோதனையில், அவரது உடலில் ஈயத்தின் அளவு குறைந்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, தனது மனைவி மற்றும் மனைவி குடும்பத்தினர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தாய் உணவில் ஏதோ ஒன்றைத் தெளிப்பதாகத் தனது மகன் தன்னிடம் தெரிவித்ததாக சுஷில் கூறியுள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சுஷிலின் மனைவி ரேணு பட்நகரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் போது, ​​தனது கணவருக்கு சுமார் ரூ.6 கோடி மதிப்புள்ள பயண நிறுவனமும், ரூ.2 கோடிமதிப்புள்ள ஆயுள் காப்பீடும் இருப்பதாக ஒப்புக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தனது கணவரின் சொத்துக்களையும் காப்பீட்டுப் பணத்தையும் கைப்பற்ற விரும்பியதாகவும் கூறப்படுகிறது.