அவுஸ்திரேலியாவில் தேர்தலில் போட்டியிடும் இலங்கைத் தமிழ் இளைஞன்!!

1305

Sujan

நியூ சவூத் வேல்ஸ் மாநில தேர்தலில் அவுஸ்திரேலியத் தமிழர் ஒருவர் போட்டியிடுகிறார். இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவில் குடியேறிய சுஜன் செல்வன் பசுமைக் கட்சியின் வேட்பாளராக் களமிறங்குகிறார்.

மேற்கு அவுஸ்திரேலிய பிராந்தியத்தில் தமிழர்கள் செறிந்து வாழும் Prospect தொகுதியில் தாம் போட்டியிடுவதாக திரு.செல்வன் அறிவித்துள்ளார்.

இந்த வேட்பாளர், 15 வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவை அடைந்து, தற்போது Wentworthville பிரதேசத்தில் சிறிய அளவிலான வர்த்தக முயற்சியின் உரிமையாளராக செயற்படுகிறார்.

தாம் பசுமைக் கட்சியைத் தெரிவு செய்வதற்குரிய காரணங்களை விபரித்த திரு.செல்வன், இலங்கைத் தமிழர்களின் பிரச்சனை உள்ளடங்கலாக மனித உரிமை மீறல்களுக்காக குரல் கொடுத்தவர்களில் பசுமைக் கட்சியின் அரசியல்வாதிகள் முதன்மையானவர்கள் என்று குறிப்பிட்டார்.

அவுஸ்திரேலியாவுக்கு கடந்த 2000ம் ஆண்டு புகலிடம் கோரி வந்த சுஜன் செல்வன் என அழைக்கப்படும் இவர் இது தொடர்பாக தெரிவிக்கையில்,

அவுஸ்திரேலியாவில் தமிழர்கள் சார்பில் பசுமை கட்சியில் போட்டியிடுகின்றேன். வருகின்ற 3ம் மாதம் நடைபெறும் இந்த தேர்தலில் அவுஸ்திரேலியாவில் உள்ள தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முகமாக தேர்தலில் போட்டியிடுகின்றேன்.

கிறீன் கட்சியானது இலங்கை தமிழர்கள் விடயம் மற்றும் அகதிகள் தொடர்பாக தொடர்ந்து குரல் கொடுக்கின்ற காரணத்தினால் தான் கிறீன் கட்சியை ஆதரித்து தேர்தலில் போட்டியிடுகின்றேன்.

தற்போது அவுஸ்திரேலியாவில் தமிழர்கள் சற்று அதிகரித்துள்ள காரணத்தினால் வருகின்ற காலங்களில் ஒரு பிரதிநிதியை தேர்ந்தெடுக்கின்ற சந்தர்ப்பம் தற்போது உருவாகியுள்ளது.

அது போன்று இளம் சமுதாயத்தினரும் வருகின்ற காலங்களில் அரசியலில் தங்களது ஆதிக்கத்தை செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அது போன்று அகதிகள் விடயத்திலும் தான் தொடர்ந்து குரல் கொடுப்பதாகவும் தான் வெற்றி பெறும் பட்சத்தில் இலங்கை தமிழர்கள் தொடர்பாகவும் ஈழ அகதிகள் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் தொடர்பாக தனது குரல் ஒலிக்கும் என்றும் தெரிவித்தார்.

எமது இலக்கை அடைய வேண்டும் என்றால் மற்றைய நாடுகளை போன்று அவுஸ்திரேலியாவிலும் ஒற்றுமையாக ஒன்று சேர்ந்து எமது மக்களின் நலன் சார்ந்த விடயங்களை செயற்படுத்த தனக்கு மக்களின் ஆதரவு கிடைக்கும் என நான் நம்புகின்றேன்.

அவுஸ்திரேலியாவில் இதற்கு முதல் ஒரு பெண் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். இவர் இரண்டாவது தமிழ் வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது