தன்னந்தனியாக கடல் வழியாக உலகை சுற்றிவந்து இங்கிலாந்தை சேர்ந்த 70 வயது பெண் சாதனை படைத்துள்ளார்.
மேற்கு லண்டனை சேர்ந்த ஜியேன் சாக்ரட்டீஸ் என்ற அந்த பெண் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கனடாவில் உள்ள விக்டோரியா துறைமுகத்தில் இருந்து இந்த சாகச பயணத்தை தொடங்கினார்.
கணவருடன் பலமுறை கடல் பயணம் சென்றிருக்கும் ஜியேன் சாக்ரட்டீஸ், கணவர் இறந்த பின்னர் தன்னந்தனியாக கடல் வழியாக25 ஆயிரம் மைல் பயணித்து உலகை சுற்றிவந்து259 நாட்களில் இந்த சாதனையை படைத்துள்ளார்.
இதன் மூலம் கடல் வழியாக தன்னந்தனியாக உலகை சுற்றிவந்த அதிக வயதான பெண் என்ற புதிய சாதனையை இவர் ஏற்படுத்தியுள்ளார்.
கடந்த2009-ம் ஆண்டு இதே முயற்சியில் படகில் புறப்பட்ட ஜியேனின் பயணம் படகு பழுதானதால் தென் ஆப்பிரிக்காவில் முடிவடைந்தது.
2010-ம் ஆண்டு மீண்டும் ஒருமுறை புறப்பட்டு 72-வது நாள் படகு விபத்துக்குள்ளானதால் அந்த முயற்சியும் நிறைவேறாமல் போனது.
எனினும், தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத ஜியேன், 3-வது முறையாக தனது கனவை நனவாக்கியுள்ளார்.
2003-ம் ஆண்டு புற்று நோயால் மரணமடைந்த தனது கணவரின் நினைவாக மேரி கியூரி புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சி நிலையத்திற்கு நிதி திரட்டும் நோக்கில் இந்த சாதனை பயணத்தை ஜியேன் சாக்ரட்டீஸ் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.