செம்மரக் கடத்தல் தொடர்பாக கரகாட்டக்காரி மோகனாம்பாள் தற்போது ஆந்திர பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக கூறி 20 தமிழர்களை ஆந்திர பொலிசார் சுட்டுக் கொன்ற வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ளது.
சமீபத்தில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட நடிகர் சரவணன் மற்றும் நடிகை நீத்து அகர்வால் மற்றும் 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், சரவணன், நீத்து அகர்வால் ஆகியோரின் பின்னணியில் இருப்பவர்களை பிடிக்கவும் பொலிசார் முயன்று வருகின்றனர்.
இந்நிலையில் செம்மரக் கடத்தலில் கோடிகளை குவித்த கரகாட்டக்காரி மோகனாம்பாள், மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு தமிழக பொலிசாரிடம் சிக்கிய மோகனாம்பாளை தற்போது ஆந்திர மாநில பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
வேலூரை அடுத்த காட்பாடியில் வசித்து வரும் மோகனாம்பாள், வீட்டில் இருந்து 4 கோடியே 7½ லட்சம் பணமும், 700 கிராம் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கடந்த ஆண்டு கைப்பற்றப்பட்டது.
இதையடுத்து நடந்த விசாரணையில், மோகனாம்பாள் செம்மரக்கடத்தலில் ஈடுபட்டு கோடிகளை குவித்ததும், கடத்தல் ராணியாக வலம் வந்ததும் தெரியவந்தது.
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் சில நாட்கள் கழித்து பிணையில் வெளியில் வந்து காட்பாடியில் உள்ள தனது வீட்டிலேயே வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று ஆந்திரா மாநில செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு பொலிஸ் டி.எஸ்.பி. கிரிதர் தலைமையிலான பொலிசார் காட்பாடியில் உள்ள மோகனாம்பாளின் வீட்டுக்கு திடீரென சென்று கைது செய்துள்ளனர்.
தற்போது செம்மரக் கடத்தல்காரர்களுக்கும், வியாபாரிகளுக்கும் மோகனாம்பாள் இடைத்தரகரகராக இருந்தே கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தது தெரியவந்துள்ளது.
இன்று மாலையில் சித்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படும் அவர் அம்மாநில சிறையில் அடைக்கப்படுகிறார்.






