இலங்கைக்கு கடத்த முயன்ற 120 பந்தய புறாக்கள் பறிமுதல்!!

18

தமிழ்நாடு இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் இருந்து நாட்டுப் படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற 120 பந்தய புறாக்களை க்யூ பிரிவு பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகம் மற்றும் பாம்பன் பாலம் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த க்யூ பிரிவு பொலிஸார்,

சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற காரொன்றை சோதனையிட்டபோது அதில் ஆறு இரும்புக் கூடைகளில் 120 புறாக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து காருடன் புறாக்களையும் கைப்பற்றிய பொலிஸார், மதுரை பகுதிகளைச் சேர்ந்த இருவரை கைதுசெய்து மேலதிக விசாரணைகளுக்காக சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

விசாரணைகளில், குறித்த பந்தய புறாக்கள் கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக மதுரையில் இருந்து கொண்டு வரப்பட்டதாக சந்தேகநபர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நாட்டுப் படகு ஒன்று பொலிஸாரைக் கண்டதும் கடலுக்குள் தப்பிச் சென்றுள்ளதாகவும், அது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு கடல் வழியாக பந்தய புறாக்கள் கடத்த முயற்சிக்கப்பட்டு பிடிபட்டுள்ளமை இதுவே முதல் முறை என குறிப்பிடப்பட்டுள்ளது.