
திருப்பதி ஏழுமலையான் வெங்கடேஸ்வர சுவாமியின் அருளைப் பெறுவதற்காக 116 வயது மூதாட்டி ஒருவர் நடந்தே திருமலைக்குச் சென்ற நிகழ்வு, இந்தியா முழுவதும் உள்ள மக்களின் மனதைக் கவர்ந்துள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்த பக்தரான நவநீதம்மா மேற்கொண்ட இந்த பயணம், பக்தர்கள், ஆலய நிர்வாகத்தினர் மற்றும் ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடு ஆகியோரின் பாராட்டைப் பெற்றது.
அவரது இந்தப் புனிதப் பயணம் தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் தற்சமயம் வைரலாகி வருகின்றன. 116 வயதான போதும் ஏழுமலையானை கஆண வெளிப்படுத்திய மன உறுதியையும் பக்தியையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நம்பிக்கையின் அடையாளமாக மேற்கொள்ளும் பாதயாத்திரையான திருப்பதி திருமலை கோயிலுக்கான மலைப்பயணத்தை அவர் தனது குடும்பத்தினருடன் இணைந்து வெற்றிகரமாக நிறைவு செய்தார்.
மூதாட்டியின் அசாதாரணமான அர்ப்பணிப்பால் நெகிழ்ந்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் , நவநீதம்மா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு திங்கட்கிழமை அதிகாலையில் சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்தது.
இந்தச் செயல், அந்த முதிய பக்தை தனது உத்வேகம் அளிக்கும் புனிதப் பயணத்தை நிறைவு செய்த பின்னரும், வெங்கடேஸ்வர சுவாமியை எவ்வித சிரமமும் இன்றி நிம்மதியாகத் தரிசிக்க வழிவகுத்தது.
இந் நிலையில் நம்பிக்கையும் மன உறுதியும் வயதைக் கடந்து செயல்படக்கூடியவை என்பதற்கு நவநீதம்மாவின் இந்தப் பயணம் ஒரு சிறந்த சான்றாக அமைந்துள்ளது.





