
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டில் எந்த பகுதியிலும் தமிழர்கள் யுத்தத்தின் போது இறந்த தமது உறவுகளை நினைவு கூரலாம். அதற்கு எந்த தடையும் இல்லை. அது அவர்களது உரிமை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
எனினும் பயங்கரவாதிகளாக அறியப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவு கூர்தல், அது தொடர்பில் பொதுவான நிகழ்வுகளை நடத்துதல் உள்ளிட்ட நடவ்டிக்கைகள் தடைசெய்யப்பட்டவை அவற்றை முன்னெடுக்க முடியாது. என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர மேலும் தெரிவித்ததாவது..
இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதென்பது மனிதாபிமான செயல். அத்துடன் அது உறவுகளின் உரிமையாகும். அப்படி இருக்கையில் வடக்கில் தமிழர்கள் தமது உறவுகளை நினைவு கூரும் போது அதற்கு யாரும் தடை விதிக்க முடியாது. நாமும் தடை விதிக்கவில்லை. வடக்கு மட்டுமன்றி நாட்டில் எந்த பிரதேசத்திலும் இறந்த ஒருவருக்காக உறவினர்கள் அஞ்சலி செலுத்தலாம்.
இந் நிலையில் இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பு என்ற ரீதியில் விடுதலைப் புலிகளை நினைவு கூர்வதே சட்ட விரோதமானது என்ற ரீதியில் நாம் தடை செய்துள்ளோம். விடுதலைப் புலிகள் சட்ட விரோத பயங்கரவாத அமைப்பு என்ற ரீதியில் அவர்களை நினைவு கூர்வதும் தவறாகும். அதன்படியே புலிகள் அமைப்பை நினைவு கூரும் விதமாக பொது இடங்களில் கூட்டங்களை நடத்துவது, சுடர் ஏற்றுவது உள்ளிட்ட விடயங்களை நிக்ழ்வுகளை நாம் தடை செய்கிறோம். அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை நாம் கைதுச் செய்வோம்.
அண்மையில் வடமாகாண சபை உறுப்பினர் சிவஜிலிங்கம் புலிகளை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இந் நிலையில் முல்லை தீவு உதவி பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனைக்கு அமைய பொலிஸார் அங்குச் சென்ற அவரிடம் விளக்கம் கோரிய போது, அவர் யுத்ததில் உயிரிழந்த தனது உறவினர் ஒருவருக்கு அஞ்சலி செலுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். அது அவரது உரிமை. அவரது உறவுகளுக்கு அவரால் அஞ்சலி செலுத்த முடியும். அதில் எவ்வித தவறும் இல்லை. என்றார்.





