காமுகர்களை அழித்து காரிகைகளை காப்பாற்று : மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!!

485

Kili

யாழ்ப்பாணம் புங்குடுதீவு பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு மிக கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்வத்தை கண்டித்து இன்று (15.05) கிளிநொச்சியில் பாடசாலை மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.

கிளிநொச்சி மாகா வித்தியாலயம், கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவர்கள், கிளிநொச்சி சென்திரேசா பெண்கள் கல்லூரி மாணவிகள் ஒன்றிணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.

இன்று மதியம் 12 மணியளவில் கிளிநொச்சி பழைய கச்சேரி முன்பாக இருந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு புதிய மாவட்டச் செயலகத்தை நோக்கி சென்ற மாணவர்கள் அங்கு தங்களது கண்டன அறிக்கையை வாசித்த பின்னர் ஜனாதிபதிக்கான மகஜரை மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகத்திடம் கையளித்தனர்.

அத்தோடு வட மாகாண முதலமைச்சர், பாராளுமன்ற பிரதிக்குழுக்களின் தவிசாளர் முருகேசு சந்திரகுமார், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வட மாகாண கல்வி அமைச்சர் ஆகியோருக்கான மகஜர்களும் மாணவர்களினால் அனுப்பி வைக்கப்பட்டது.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள், ‘மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும், ‘மாணவர்களது மாண்புகள் மதிக்கப்படல் வேண்டும்’· ‘மாணவர்களின் கல்வி கற்றலுக்கான சூழல் ஏற்படுத்தல் வேண்டும்’· ‘எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ள மாணவர்களின் நிலை உறுதிப்படுத்தல் வேண்டும்’, ‘மாணவர்களாகிய எங்களது உயிரை யார் பாதுகாப்பது’· ‘ எமது கல்விக்கான உத்தரவாதத்தை யார் தருவார்கள்’· ‘எமக்கான அமைதியான சூழலையும், அழகிய வாழ்வையும் யார் உறுதிப்படுத்துவது’· ‘ வாழும் போதுள்ள எமக்கான உரிமைகள் மதிக்கப்படுமா’· ‘இன்னும் இன்னும் இது போன்ற எத்தனை துன்பியல் அவலங்களை நாம் சந்திப்பது’ மேற்படி கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்களது தங்களது ஆர்ப்பாட்டதை மேற்கொண்டனர்.