
சர்ச்சைக்குரிய வவுனியா பேயாடிகூழாங்குளம் பொதுக்காணி கிராமத்தின் பொது தேவைக்கு பயன்படுத்தும் வகையில் மக்களுக்கு மீள கையளிக்கப்படல் வேண்டும் எனத் தெரிவித்து வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் வவுனியா பிரதேச செயலருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக வவனியா பிரதேச செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பேயாடிகூழாங்குளம் கிராமத்திலுள்ள பொதுக் காணியானது தங்களால் குறிப்பிட்டவொரு பொது அமைப்பிற்கு வழங்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் எனக்கு முறையிட்டுள்ளனர். பழமையான இந்த கிராமத்தில் ஏற்கனவே இராணுவத்தினரின் தேவைக்கு பெருமளவிலான காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது மீள்குடியேறி வரும் மக்களுக்கான பொதுக்கட்டிடங்களை அமைப்பதற்கு காணப்படும் மேற்படி காணியானது குறிப்பிட்டவொரு அமைப்பிற்கு குத்தகை அடிப்படையில் வழங்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் அருகிலுள்ள கிராமங்களிலேயே கல்வி கற்று வருகின்றனர்.
இந்த கிராமத்திலிருந்த பாடசாலை கடந்த 20 வருடங்களுக்கு மேலாக அயற்கிராமத்தில் இயங்கி வருகின்றது. இந்த நிலையில் இவர்களுக்கான பாலர் பாடசாலையோ, பொதுநோக்கு மண்டபமோ அமைப்பதற்கு பொதுக் காணி அவசியமாகும். இது தொடர்பாக இரண்டு தரப்பினரையும் அழைத்து பேச்சு நடாத்தினேன்.
இரு பகுதியினருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படுதல் அவசியமாகும். குறிப்பிட்ட பொது அமைப்பின் சேவையின் தேவையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வேறொரு இடத்தில் காணி வழங்க ஆவனசெய்யுமாறு அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.





