இளைய தலைமுறை குறித்து பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!!

757

ingaranesan

புங்குடுத்தீவில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட மாணவியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி நேற்று வெள்ளிக்கிழமை (15 புங்குடுத்தீவு மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வட மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அஞ்சலி உரையாற்றினார். அவர் கூறியதாவது,

மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை மிருகத்தனமானது என்று சிலர் குறிப்பிட்டார்கள். நான் அவ்வாறு சொல்லமாட்டேன். மிருகங்கள் கூடச் செய்யத் துணியாத கொடுஞ்செயல் இது.

இந்த மாபாதகத்தில் ஈடுபட்டவர்கள் எத்தனை பிறவிகள் எடுத்தாலும் எந்தப் பிறவியிலும் அவர்களுக்கு மன்னிப்பே கிடையாது.

போருக்குப் பிறகு இதுபோன்ற கொலைகளும், சமூகவிரோதச் செயற்பாடுகளும் அதிகிரித்துள்ளன. இவற்றின் பின்னணியில் போதைப் பழக்கம் ஒரு பிரதான காரணமாக இருக்கிறது.

என்றும் இல்லாத வகையில் இளைய தலைமுறையிடையே போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது. எமது இளைய தலைமுறையை தவறான பாதையில் வழி நடத்துவதன் மூலம் அவர்களின் விடுதலை உணர்வை மழுங்கடிக்கச் செய்யலாம் என்ற நோக்கத்துடனேயே இங்கு போதைப்பொருள் பாவனை திட்டமிட்டு ஊக்குவிக்கப்படுகிறது.

எனவே, எமது இளைய தலைமுறையின் பாதுகாப்புக் குறித்து பெற்றோர்கள் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எமது இளைய தலைமுறையின் பழக்க வழக்கங்கள் குறித்து நாம் விழிப்பாயிருக்க வேண்டும்.

வடக்கு மாகாண சபையும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்குரிய தீர்க்கமான வழிமுறைகளை ஆராய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற இவ் அஞ்சலி நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, சிவஞானம் சிறீதரன், வட மாகாணசபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், மாகாண சபை உறுப்பினர்கள் அனந்தி சசிதரன், பா.கஜதீபன், விந்தன் கனகரத்தினம், க.சிவாஜிலிங்கம் ஆகியோருடன் கல்வித் திணைக்கள அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தார்கள்.