54 நாட்களுக்குப் பின் விடுதலை பெறுகிறார் பசில் ராஜபக்ஷ!!

467

Basil

நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சுமார் ஒரு மாத காலத்திற்கு மேல் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பசில் ராஜபக்ஷவுடன் சேர்த்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் வைத்தியர் நிஹால் ஜயதிலக, திவிநெகும திணைக்கள பணிப்பாளர் ஆகியோருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு கோரிக்கை இன்று (15.06) பரிசீலனைக்கு வந்தபோது சந்தேகநபர்களை 1 லட்சம் ரூபா சரீரப் பிணையிலும் தலா 10 லட்சம் ரூபா பெறுமதியான 4 ஆள் பிணைகளிலும் விடுதலை செய்யுமாறு நீதிபதி சரோஜினி குசலா வீரவர்த்தன உத்தரவிட்டார்.

அத்துடன் ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிறு அன்று கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று கையொப்பமிடுமாறு நீதிபதி சந்தேகநபர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வர் கடந்த ஏப்ரல் 22ம் திகதி பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கடுவல நீதவான் நீதிமன்றால் பசில் ராஜபக்ஷ எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதால் மேல் நீதிமன்றின் பிணை உத்தரவு கடுவல நீதவான் நீதிமன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின்னரே பசில் ராஜபக்ஷ விளக்கமறியலில் இருந்து விடுதலை செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.