வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலயத்தில் நேற்றிரவு திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நள்ளிரவில் ஆலயத்தை உடைத்து உட்புகுந்த மர்ம நபர்கள், மூலஸ்தானத்தையும் உடைத்து, அங்கிருந்த மூலஸ்தான விக்கிரகத்தை தகர்த்தெடுத்து உள்ளிருந்த ஐம்பொன் உலோகங்களைத் திருடிச்சென்றுள்ளனர்.
கோயிலின் வலதுபக்க கதவினை உடைத்தே திருடர்கள் உட்புகுந்துள்ளனர். அத்தோடு, மூலஸ்தான மூர்த்தியின் அங்கிகளும் எடுத்துச்செல்லப்பட்டுள்ள அதேவேளை கோயில் உண்டியலும் உடைக்கப்பட்டுள்ளது. அத்தோடு கோயில் காரியாலயமும் திறக்கப்பட்டு உள்ளிருந்த ஒருசில பொருட்களும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
எதிர்வரும் சனிக்கிழமை ஆலயத்தின் பொங்கல் விழா நடைபெறுவதற்கு பிரமாண்டமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுவரும் நிலையில், இச்சம்பவம் பொங்கல் விழாவினைக் குழப்புவதற்கான சதித்திட்டமாக இருக்கலாமென பிரதேசவாசியொருவர் வவுனியாநெற் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த பொலிசார் மோப்ப நாய்கள், தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அத்தோடு ஆலயத்திற்கு வருகைதந்துள்ள சிவாச்சாரியார்கள் இதற்கான அனுஷ்டான பரிகாரங்களை செய்து மூலஸ்தான விக்கிரகத்தை மீண்டும் பிரதிட்டை செய்வதற்கான ஏற்பாடுகளையும் செய்துவருகின்றனர்.
மூலஸ்தான விக்கிரகம் பிரித்தெடுக்கப்பட்டபோதும் அதிஷ்டவசமாக விக்கிரகத்திற்கு எதுவித சேதங்களும் ஏற்படவில்லை. விக்கிரகம் இன்றைய தினமே கும்பாபிஷேகம் செய்யப்பட்டு மீண்டும் பிரதிட்டை செய்யப்படுமென எமக்குத் தெரிவித்த ஆலய நிர்வாகசபை உறுப்பினரொருவர், திட்டமிட்டபடி எதிர்வரும் சனிக்கிழமை பொங்கல் விழா மிகச்சிறப்பாக நடைபெறுமென தெரிவித்தார்.
-பாஸ்கரன் கதீசன்-






