வட மாகாண முதலமைச்சர் வேட்பாளருக்கு முன்னாள் பிரதம் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தகுதியானவரே என வவுனியா கல்விச்சமூகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது,
வட மாகாணசபைத் தேர்தல் இன்று உள்நாட்டிலும் சர்வதேச ரீரியிலும் கண்காணிக்கப்பட்டு வரும் ஓர் விடயமாக காணப்படுகின்றது. இந்நிலையில் பல வாத பிரதி வாதங்களுக்கு மத்தியில் தமிழ் தேசிக்கூட்டமைப்பு முன்னாள் பிரதம் நீதியரசரை முதலமைச்சர் வேட்பாளராக தெரிவு செய்தமையை வரவேற்கின்றோம்.
முதலமைச்சர் வேட்பாளராக தெரிவு செய்வதற்கு முதலில் பிரேரிக்கப்பட்டிருந்த மாவை சேனாதிராஜா மற்றும் சி.விவிக்னேஸ்வரன் ஆகிய இருவரும் இரு வேறு துறைகளில் சிறந்தவர்களாகவே உள்ளனர்.
குறிப்பாக மாவை சேனாதிராஜா தமிழர்களின் நீண்ட கால அரசியல் செயற்பாட்டின் முன்னின்றுழைத்த ஜனநாயகவாதியாவார். தமிழர் விடுதலைக்கு பல தியாகங்களையும் விட்டுக்கொடுப்புக்களையும் செய்து இன்றும் சிறந்த நிலையில் உள்ள அரசியல்வாதியாகவே தமிழர்கள் மத்தியில் கணிக்கப்படுபவர்.
இந்நிலையில் சி.வி.விக்னேஸ்வரன் இன்றைய காலகட்டத்தில் சர்வதேச ரீதியில் கவனத்தை ஈர்ப்பதற்காக முன்னிலைப்படுத்தப்பட வேண்டிய ஒருவராக கருதப்படுபவர்.
சட்டத்தில் தன்னிறைவு கண்ட அவர் வட மாகாணத்தின் முதலமைச்சர் என்ற நாற்காலிக்கு பொருத்தமான புத்திஜீவியாவார். எனவே தமிழ் தேசிக்கூட்டமைப்பு அவரை முதலமைச்சர் வேட்பாளராக தெரிவு செய்தமையை வவுனியா கல்விச்சமூகம் வரவேற்கின்றது.
இந் நிலையில் வவுனியாவின் புத்திஜீவிகள் குழுவென்ற போர்வையில் சிலர் தமது அரசியல் வளர்ச்சிக்காக மனித உரிமை காப்பாளர்களாக தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு அவரை விமர்சனம் செய்வதற்கு தகுதியானவர்களாக கருத முடியாது.
இதேவேளை சிலர் தாமாக அமைத்துக்கொள்ளும் குழுக்களுக்கு சமூகத்தின் நன் மதிப்பான பெயர்களை சூட்டி எவ்வித பதிவுகளும் இன்றி அறிக்கைகளை வெளியிட்டு தமிழ் மக்கள் மத்தியியல் குழப்பமான நிலையை தோற்றுவிப்பதை வவனியா மாவட்ட கல்விச்சமூகம் என்ற ரீதியில் நாம் ஏற்றுக்கொள்ளாததுடன் கவலையும் அடைகின்றோம் என தெரிவித்துள்ளனர்.





