வவுனியாவில் யுவதி மீது பாலியல் பலாத்கார முயற்சி : சிவில் பாதுகாப்புத் தலைவர் மீது தாக்குதல்!!(படங்கள், காணொளி)

837

வவுனியா பொலிஸ் நிலையத்தில் இன்று (07.07.2015) காலை 10 மணியளவில் மரக்காரம்பளை பழையமணிபுரம் பகுதியினைச் சேர்ந்த பொதுமக்கள், கிராமசேவையாளர் தலைமையில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளனர். இவ் விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

கடந்த 28.06.2015 அன்று வவுனியா மரக்காரம்பளை பழைய மணிபுரம் பகுதியில் அதே கிராமத்தினைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் 16 வயதுடைய யுவதி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முற்பட்டதாக அக் கிராமத்தைச் சேர்ந்த சிவில் பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த வீரையா என்பவரிடம் முறையிட்டுள்ளனர்.

சிவில் பாதுகாப்புக் குழுவினருக்கு குறித்த இளைஞர்கள் ஒத்துழைப்பு வழங்காததால் மேலதிக விசாரணைகளுக்காக பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இவ் விடயத்துடன் தொடர்புபட்ட இளைஞர்கள் பொலிசில் முறையிட்டதையடுத்து சிவில் பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்த வீரையாவை கடந்த சனிக்கிழமை (04.07.2015) அன்று இரவு வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த நிலையில் அவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இத்தாக்குதலை மேற்கொண்ட இளைஞர்களை பொலிசார் கைது செய்து விசாரணையின் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கிராம சேவையாளர் நஸார் தலைமையில் இன்று வவுனியா பொலிஸ் நிலையத்தில் தமது எதிர்ப்பினை தெரிவித்ததுடன் இத் தாக்குதலுக்கு உரிய விசாரணையினை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர் .

அத்துடன் வவுனியா பொது வைத்தியசாலைக்குச் சென்று படுகாயமடைந்த சிவில் பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த வீரையாவிற்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படவில்லை எனக்கூறி வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளரிடம் கிராமசேவையாளர் சென்று முறையிட்டார்.

இதற்குப் பதிலளித்த வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்திய நிபுணரின் ஆலோசனைப்படி சிகிச்சை நடைபெற்றதாகக் கூறினார்.

இவ்விடயம் தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

-பிராந்திய செய்தியாளர்-

1 2 3 4 5 6 7