வவுனியா நகரசபைக்குட்பட்ட மரக்கறிச் சந்தைக்கு பின்புறமாக இருக்கும் கோழி இறைச்சி விற்பனை நிலையத்திற்கு முன்பாக இருக்கும் வவுனியா குளம் மற்றும் வாய்க்கால் போன்ற பகுதிகளில் கழிவுகள் நிறைந்து காணப்படுவதுடன் பல காலமாக சுத்தம் செய்யப்படாமல் காணப்படுகின்றது.
இவ் விடயம் தொடர்பாக வவுனியா நகரசபை செயலாளரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்ட போது, அப்பகுதி நகரசபை ஊழியர்களினால் தினமும் 2 மணிக்குப் பின்னர் சுத்தம் செய்யப்படுவதாகவும் குப்பைகள், கோழிக் கழிவுகள் போன்றவற்றை அகற்றிவருவதனால் கோழிக்கடை ஊழியர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு ஏற்புடையது அல்ல எனவும் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக கோழிக்கடை ஊழியர்கள் கருத்து தெரிவிக்கையில், வவுனியா நகரசபை ஊழியர்கள் சுத்தம் செய்வதாகவும் அதனைச் சரியான முறையில் சுத்தம் செய்வது கிடையாது எனவும் அவர்களின் பணியில் திருப்திகரமான சேவையினைக் காணக்கூடியதாக இல்லை என்றும் கருத்துத் தெரிவித்தனர்.
அத்துடன் துர்நாற்றம் வீசுவதாகவும் இச் சந்தை ஓர் ஓதுக்குக்புறமாக காணப்படுவதினால் பெண்கள் வருவது முற்றிலும் குறைந்துள்ளதாகவும், வியாபாரம் மேற்கொள்வதற்கு ஏற்ற இடத்தினை அமைத்துத்தருமாறு கோரியதுடன் வாய்க்காலில் அசுத்த நீர் தேங்கி இருப்பதால் நுளம்புகள் பெருக்கேடுப்பதற்கு சந்தர்ப்பம் உள்ளதாகவும் தோற்றுநோய் பரவுவதற்கு வழிசமைத்துள்ளதாகவும்,
அத்துடன் முன்புறமாக அமைந்திருக்கும் மரக்கறிச் சந்தையில் பணிபுரிபவர்கள் மலசலகூடம் இன்மையினால் குளத்திற்கு அருகாமையில் மலசலம் கழிப்பதனால் துர்நாற்றம் வீசுகின்றது. கோழிச் சந்தைக்கு முன்பாக காணப்படும் குளத்தினுள் கழிவுகள் கொட்டப்படுவதால் குளத்தினுள் மீன்கள் இறப்பதாகவும், எனவே இதற்கு தகுந்த நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு ஊரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இவ்விடயம் தொடர்பான உரிய அதிகாரிகளின் கவனம் எடுப்பார்களா?
-பிராந்திய செய்தியாளர்-






