
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர் மா.றோய் ஜெயகுமார் (இலங்கை வங்கியின் ஒய்வுநிலை முகாமையாளர்) அவர்கள் வவுனியா நெற் இணையத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் பின்வருமாறு தெரிவித்தார்..
துயிலும் இல்லம் என்று அவர்களால் அழைக்கப்பட்டதற்கு இன்று என்ன நடந்தது. அவற்றை இடித்து உழுது அவற்றில் கட்டிடங்களை கட்டுகிறார்கள். அவற்றை உழும் போது அவர்களின் உறவுகளின் மனதை உழுவது போல மனதில் தோன்றவில்லையா?
யுத்தம் ஒன்று நடந்து முடிந்தால் அங்கு கணக்கெடுப்பு நடத்தப்படும். சர்வதேச ரீதீயில் ஓர் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். எத்தனை உயிர்கள் காவுகொள்ளப்பட்டது, எத்தனை குழந்தைகள் காவு கொள்ளப்பட்டனர், எத்தனை பெண்கள் சிதைக்கப்பட்டார்கள், எத்தனை வீடுகள் அழிக்கப்பட்டது, எத்தனை வாகனங்கள் அழிக்கப்பட்டது என கணக்கெடுப்பு செய்யப்பட வேண்டும்.
ஆனால் அரசாங்கம் கணக்கெடுப்பு செய்யவில்லை. இது அரசாங்கங்களின் பொறுப்பு. அதை அவர்கள் செய்திருந்தார்களானால் எங்கள் சொத்துக்கள் மற்றும் மனித அழிவுகளை சரியாக தெரிந்துகொண்டிருக்கலாம். அதே போல் மீள்குடியேற்றப்பட்டவர்கள் அதாவது வீடுகளை உடைத்தவர்கள் அவர்களை ஒழுங்கான முறையில் குடியேற்றியிருத்தல் வேண்டும். ஒழுங்காக வீடுகளை கட்டி கொடுத்திருத்தல் வேண்டும்.
வவுனியாவில் கூட வீட்டுத்திட்டத்தில் பல மோசடிகள் நடைபெற்றது. உதாரணமாக தமிழ் மக்களுக்கு 100 வீடுகள் தேவையாக இருந்தால் தமிழ் மக்களுக்கு கிடைப்பது 18 வீடுகள் மாத்திரமே. சிங்கள மக்களுக்கு 100 வீடுகள் தேவையாக இருந்தல் 75 வீடுகள் மட்டுமே கிடைக்கின்றது. ஆனால் முஸ்ஸிம் மக்களுக்கு 100 வீடுகள் தேவையாக இருந்தால் 118 வீடுகள் கிடைக்கின்றது. நான் இதை முஸ்ஸிம் மக்களுக்கு எதிராக சொல்லவில்லை. உண்மையாக முஸ்ஸிம் மக்களில் வீடு தேவையான மக்களுக்கு வீட்டுத்திட்டம் கிடைக்கவில்லை. நான் சென்ற கிராமங்களான செட்டிகுளம், நேரியகுளம் முஸ்ஸிம் மக்களில் தேவையானவர்களுக்கு வீடுகள் கிடைக்கவில்லை. இன்னும் தமிழ் மக்கள் கொட்டில்களில் வாழ்கின்றார்கள்.
உண்மையாக வீடு தேவைப்பட்டவர்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை. வீடு தேவையற்றவர்களுக்கு வீட்டு வசதி வழங்கப்படுகின்றது. ஒருவருக்கு இரு வீடு மூன்று வீடு என்ற வீதத்திலும் வழங்கபட்டிருக்கிறது. ஆனால் அப்படிக் கட்டப்பட்ட வீடுகளில் இன்று மக்கள் இல்லை. அங்கு வெளவால்களும் குருவிகளும் பேய்களும் தான் இருக்கின்றது. உண்மையில் வீடுகள் தேவைப்பட்ட முஸ்லிம், தமிழ், சிங்கள் மக்கள் இன்றும் கொட்டில்களிலும் தார்ப்பாய்களிலும் வாழ்ந்து வருகின்றார்கள் .
அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்று சொல்வார்கள். தமிழ் மக்கள் ஒன்றுபட்டு வாக்களித்தால் நிச்சயமாக வவுனியாவில் 5 ஆசனங்களுக்கு மேல் பெற்றுக்கொள்ளலாம். 2005ம் ஆண்டு நடந்த தேர்தல் எடுத்துக்காட்டாக இருக்கின்றது. அத் தேர்தல்க் காலத்தில் விடுதலைப்புலிகள் சக்தி மிக்கவராக காணப்பட்டார்கள். அவர்கள் எல்லோரையும் ஒன்றுபடவைத்து வாக்காளர்களையும் ஊக்குவித்து 100 இற்கு 85 வீத வாக்குகளைப் போடவைத்து அதன்மூலம் வவுனியாவில் 5 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டார்கள்.
வன்னி மாவட்டத்தில் சிங்கள பேரினவாதிகள் எமது வாக்குகளை உடைப்பதன் மூலம் எங்களுடைய மொத்தமாக பெருக்ககூடிய வாக்குகளை குறைப்பதற்கு பல விதத்திலும் சுயேற்சைகளாக அவர்களை போட்டியிட வைத்து இந்த வாக்குகளை சிதறடிப்பதற்கு முயற்சி செய்தார்கள். ஆனால் தமிழ் மக்கள் பொதுவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே ஆதரிப்பார்கள். காரணம் கடந்தகாலங்களிலும் இதுதான் நடந்துள்ளது.
தமிழ் மக்களின் பலத்தினால் தான் இன்று மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருக்கின்றார். தமிழ் மக்கள் ஒன்றுசேர்ந்து வாக்களித்தார்கள். அதேபோல் இம்முறையும் அதேமக்கள் நிச்சயமாக சிதறடிக்கப்படமாட்டார்கள். அவர்கள் ஒன்றாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்து இம்முறையும் வன்னி மாவட்டத்திலிருந்து 5 பேரை பாராளுமன்றத்திற்கு அனுப்புவார்கள் என்று தெரிவித்தார்.
முழுமையான செவ்வியினை கீழுள்ள காணொளியில் காணுங்கள்.
-பிராந்திய செய்தியாளர்-





