வவுனியாவில் உயிராபத்தை எதிர்நோக்கும் 16 குடும்பங்கள்!!(படங்கள்)

490

வவுனியா காத்தார்சின்னக்குளம் ஸ்ரீராமபுரம் பகுதியில் வசித்துவரும் 16 குடும்பங்கள் குடியிருக்கும் காணியூடாகச் செல்லும் மின் கம்பத்தால் எந்நேரமும் ஆபத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.

கடந்த 2011ஆண்டு வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் கிழ் இப்பகுதி மக்களுக்கு மின்சாரம் வழங்குவதாக தெரிவித்து மக்கள் குடியிருக்கும் குடியிருப்புப் பகுதியூடாக மின்கம்பங்கள் நாட்டப்பட்டு வீட்டின் கூரைமேலாக மின்சார கம்பிகள் நிறுவப்பட்டுள்ளது.

உயரழுத்த மின்சார இணைப்புக்கள் வீட்டிற்கு மேலாகச் செல்வதால் வீட்டில் வசிப்பவர்களுக்கு பாதுகாப்பற்றதாக இருப்பதுடன் மேற்படி விடயம் தொடர்பாக அரசாங்க அதிபர் பணிமனை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, இலங்கை மின்சார சபையின் வடமாகாணத்திற்கான பொது முகாமையாளர் வடக்கின் வசந்தத்திற்கான பொறியியலாளர் உட்பட அனைவரின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் வசிக்கும் பலரிற்கு காணிப் பத்திரம் மட்டுமே உள்ளதால் நடவடிக்கை எடுப்பதற்கு தயங்குகின்றார்கள். ஆனால் திருமதி பா.சந்திரவதனா என்பவரின் காணி உறுதிக்காணி எனவே அவர் மட்டுமே எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றார்.

அரசாங்க அதிபார், மின் பொறியியலாளருக்கு அனுப்பியிருக்கும் கடிதத்தில் குறித்த நபரது வீட்டுக் காணியில் தங்களால் மின்கம்பங்கள் நாட்டப்படும்போது அவரால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டபோதும் அதையும் மீறி மின்கம்பங்கள் நாட்டப்பட்டு மின் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் குடியிருப்பாளர்களின் வீட்டிற்கு மேல் உயரழுத்த மின்சாரம் செல்வதால் எந்நேரமும் அசம்பாவிதங்கள் எதுவும் நிகழலாம்.

எனவே இவ்வாறான எதிர்ப்பின் மத்தியிலும் இவ் மின்கம்பங்கள் எச் சட்டத்தின் கீழ் நாட்டப்பட்டது என்றும் இவற்றை அகற்றுவது தொடர்பில் எச்சட்டம் இடம் கொடுக்கவில்லை என்ற விளக்கத்தையும் உடனடியாக அறிக்கையிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

வவுனியா மாவட்ட இடர்முகாமைத்துவ அதிகாரி நேரில் சென்று பார்வையிட்டதுடன் வதிவிடத்தினூடாக செல்லும் மின் இணைப்பானது மக்களுக்கு பாரிய பாதிப்பினை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது என்பதனையும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மின்வலுச்சக்தி அமைச்சினாலும் மேற்படி மின்கம்பங்கள் அகற்றப்பட வேண்டுமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணத்திற்கான பொது முகாமையாளரிற்கு 10.07.2014 திகதியிடப்பட்ட கடிதத்தின் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் செயலாளரும் மின் அத்தியட்சகருக்கு மின்கம்பம் அமைக்கப்பட்டமை தொடர்பான முறைப்பாடு தொடர்பான மேலதிக நடவடிக்கையினை மேற்கொள்ளமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன் இவ்விடயம் தொடர்பாக சட்ட உதவி ஆணைக்குழுவின் சட்ட ஆலோசனையும் பெறப்பட்டு திட்ட முகாமையாளர், வடக்கின் வசந்தம் வவுனியா அலுவலகத்திற்கு எழுத்து மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு கடந்த மூன்று வருடமாகியும் மின் கம்பத்தை, மின் இணைப்புக்களை அகற்ற நடவடிக்கை எதனையும் இன்றுவரையில் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-பிராந்திய செய்தியாளர்-

OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA