வவுனியாவில் காணி உரிமையாளர் இறந்துவிட்டதாகக் கூறி காணியை அபகரிக்க முயற்சி!!(காணொளி)

1198

வவுனியா மன்னார் வீதி குருமன்காட்டுச் சந்தியிலிருக்கும் வீட்டின் உரிமையாளர் இறந்துவிட்டதாக கூறி போலி ஆவணங்களை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சமர்ப்பித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இன்று (10.08.2015) வவுனியா பிரதேச செயலகத்திற்கு காணி உரிமையாளர் உயிருடன் வந்து வாக்குமூலம் கொடுத்ததைத் தொடர்ந்து உடன் நடவடிக்கை எடுப்பதாக பிரதேச செயலாளர் கா.உதயராசா உறுதியளித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாகவும் அப்போது செயற்பட்ட ஆயுதக் குழுக்களினால் உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டதைத் தொடர்ந்து 1990ஆம் ஆண்டு வவுனியா குருமன்காடு சந்திக்கு அருகிலிருக்கும் குடும்பத்தினர் தமது வீடு, காணி என்பனவற்றை பாதுகாத்துத் தருவதாகவும் நீண்ட காலத்திற்கு குத்தகைக்குத் தரும்படியும் கூறியதையடுத்து பொலிஸ் உத்தியோகத்தரிடம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டனர்.

நேரம் கிடைக்கும்போது குறித்த பொலிஸ் உத்தியோகத்தருடன் தொலைபேசியில் உரையாடியும் வந்துள்ளனர். பொலிஸ் உத்தியோகத்தார் இங்கு நீங்கள் வரவேண்டாம் உங்கள் உயிருக்கு ஆபத்துள்ளது என்று அடிக்கடி கூறிவந்துள்ளார்.

1990ம் ஆண்டு மின்சாரப் பட்டியலிருந்த காணி உரிமையாளரின் பெயரினை குறித்த பொலிசாரின் பெயரிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் காலப்போக்கில் இக் காணிக்கு பத்திரம் இல்லை, இக்காணி தன்னால் துப்பரவு செய்யப்பட்டுள்ளது, இக்காணியில் முன்பு இருந்தவர்கள் இறந்துவிட்டதாகவும் கூறி பிரதேச செயலகத்தில் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.

1984ஆம் ஆண்டிலிருந்து 2011ஆம் ஆண்டு வரை காணி உரிமையாளரினால் வவுனியா நகரசபையில் சோலைவரி கட்டப்பட்டு வந்துள்ளது. இதை அறிந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் 2011ஆண்டே தனது பெயரிற்கு சோலைவரியினை மாற்றம் செய்துவிட்டார்.

இது அனைத்திற்கும் அப்போது இருந்த அதிகாரிகள் உடந்தையாக செயற்பட்டதாகவும் காணி உரிமையாளர் சார்பில் கூறப்படுகின்றது.

தற்போது காணி உரிமையாளர் சார்பில் பிரதேச செயலகத்திற்கு இக் காணிக்கு உரிமையாளர்கள் கொழும்பில் இருப்பதாகவும் காணி உறுதி மற்றும் ஆவணங்களை பிரதேச செயலகத்திற்கு சமர்ப்பித்ததைத் தொடர்ந்து இன்று காணி உரிமையாளர் பிரதேச செயலகத்திற்கு தான் உயிருடன் இருப்பதாகவும் தனது ஆவணங்கள் சட்டப்படி உள்ளது என்பதனை உறுதிப்படுத்துவதற்காக சமூகமளித்திருந்தார்.

தற்போது குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஓய்வுபெற்று யாழ்ப்பாணத்தில் அவரின் வீட்டில் வசித்து வருகின்றார். குறித்த காணியில் ஓய்வுபெற்ற பொலிசாரின் உறவினர் வசித்து வருகின்றார்.

இது குறித்து பிரதேச செயலாளர் கருத்து தெரிவிக்கையில்..

குறித்த காணியில் பிரச்சனைகள் இருப்பதாக தனது கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து ஆவணங்கள் அனைத்தையும் பரிசோதித்ததுடன் நீண்ட விசாரணையினையும் மேற்கொண்டதாகவும் உடனடியாக நடவடிக்கையினை எடுப்பதற்கு ஆவண செய்வதாகவும் தெரிவித்தார்.

-பிராந்திய செய்தியாளர்-

20150810_104928 20150810_104931 20150810_105007 20150810_105012 20150810_105147 20150810_105156 20150810_105226