எஜமானியை காக்க பாம்புடன் சண்டையிட்டு உயிரைவிட்ட நாய்!!

601

Dog

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள செந்தியம்பலம் கிராமத்தில் தனது எஜமானியை காப்பாற்றுவதற்காக பாம்புடன் சண்டையிட்டு அதனை கொன்று ஒரு நாய் தன் உயிரை விட்ட சம்பவம் அனைவராலும் வியப்பாக பார்க்கப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள செந்தியம்பலம் கிராமத்தை சேர்ந்தவர் ஆசிரியர் சாந்தி. இவர் வீட்டில் பொமரேனியன் வகை சேர்ந்த பப்பி என்ற நாய் ஒன்றை வளர்த்து வந்தார்.

நேற்று முன்தினம் ஆசிரியை சாந்தி மட்டும் தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார் மாலையில் வீட்டின் பின்பகுதியில் அந்த நாய் நீண்ட நேரம் குரைத்து கொண்டிருந்ததால் சாந்தி அங்கு சென்று பார்த்துள்ளார் அப்போது அங்கு பாம்பு தோல் கிடந்தது.

இதனால் அங்கே இருந்த அடுக்கிவைக்கப்பட்ட செங்கற்களை சாந்தி அகற்றி பார்த்தபோது செங்கலின் இடையில் இருந்து நல்ல பாம்பு ஒன்று வெளியே வந்து நின்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த சாந்தி, ஒரு நீண்ட கம்பை எடுத்து வந்து பாம்பை விரட்ட முயன்றார். ஆனால் அந்த பாம்பு அந்த கம்பில் சுற்றியவாறு, சாந்தியை கொத்த சீறியது. உடனே கம்பை கீழே போட்ட சாந்தியை நோக்கி சீறியவாறு வீட்டுக்குள் செல்ல முயன்றது பாம்பு, உடனே அங்கிருந்த நாய் திடீரென்று பாம்பின் மீது பாய்ந்து அதனை கடித்து குதறியது.

நாயின் உடலை பாம்பு இறுக்கமாக சுற்றி கடித்தது. ஆனால் நாய் விடாமல் பாம்பின் தலையை கடித்து குதறியது. இதனால் அந்த பாம்பு செத்தது. நாயின் உடலில் பாம்பின் விஷம் ஏறியதால் அதுவும் மயங்கி விழுந்து இறந்தது.

தன்னை வளர்த்த எஜமானியை காப்பாற்றுவதற்காக பாம்புடன் சண்டையிட்டு அதனை கொன்று உயிரை விட்ட நாயை அனைவரும் வியப்புடன் பார்த்தனர்.