தோல்விகண்ட நாடாக இலங்கை மாறிவருகிறது : பாராளுமன்றத்தில் வைத்தியகலாநிதி. சி.சிவமோகன்!!

624

index

எமது நாடு சுதந்திரம் அடைந்த காலம் தொடக்கம் இன ஒற்றுமைகள் சீர்குலைந்து போயுள்ளதை எவரும் மறுக்க முடியாது. எமது நாடு நிரந்தர அபிவிருத்தியை நோக்கிய பயணத்தை மேற்கொள்ளுவது முக்கியமானது.

இனங்களுக்கிடையே ஐக்கியம், இனங்களுக்கிடையேயான புரிந்துணர்வு, இனங்களுக்கிடையேயான பரஸ்பர நம்பிக்கை ஓட்டுமொத்தத்தில் சிறுபான்மை இனம்/பெரும் பான்மை இனம் என்ற பாகுபாடற்ற எண்ணக்கரு இவை எவற்றையும் எம்மால் கட்டி எழுப்ப முடியவில்லை.

இதனால் இன்று வாழ்வியலில் தோல்வி கண்ட நாடாக மாறிவிடுமோ என சர்வதேச அரங்கில் பார்க்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபை வரை எமது இனமுறுகல் நிலைபற்றிய விடயம் எடுத்துக்கொள்ளப்பட்டு ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல்விவகார பிரிவில் விவாதப்பொருளாகியுள்ளது.

எனவே இறுதியுத்தத்தில் நடந்த மனித அவலங்களுக்கு பொறுப்புக்கூறல் மனித கொடூரம் புரிந்தவர்களுக்கு எதிராக பாகுபாடற்ற தண்டனை வழங்கப்பட வேண்டும்.

அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய இனமேலாண்மை திணிப்புகழற்ற நீதி, நியாய, சுதந்திர, நிரந்தர இனப்பிரச்சனைக்கான தீர்வுகாணுதல் போன்ற விடயங்களை அடைந்து கொள்வதாக இந்த நல்லாட்சி அரசு ஐக்கிய நாடுகள் சபையிலும் சர்வதேச அரங்கிலும் ஏற்றுக்கொண்டுள்ளது.

ஆனால் இறந்தவர்களை நினைவுகூறும் நாளை கூட இந்த அரசு இராணுவத்தைக்கொண்டு அடக்கி ஒடுக்கி வருகிறது. நாட்டிலோ உங்களது தேசிய அரசின் செயற்பாடுகள் இதுவரை நம்பிக்கை தரவிரல்லை என்பது கவலைக்குரிய விடயமாக இருக்கிறது.

மேலும் எமது மக்களின் வாழ்விடங்களில் காணிகளில் எமது அரச பொது அமைப்புக்களின் காணிகளில் ஏன் இன்றுவரை இராணுவம் ஆக்கிரமிக்க இடமளித்துள்ளீர்கள் என கேட்கின்றேன்?

புதுக்குடியிருப்பு நகர் மத்தியில்
20 ஏக்கர் வரையான காணிகளை இராணுவம் ஆக்கிரமித்துள்ளது. முன்னைய அரசு முறையற்ற நியாயமற்ற விதத்தில் வர்த்தமானி பத்திரிகைமூலம் ஆக்கிரமிப்பை உறுதி செய்ய முயன்றது.

பொதுமக்களின் எதிர்ப்பு போராட்டம் மூலம் இன்று கைவிடப்பட்டுள்ளது. எனவே குறிப்பிட்ட வர்த்தமாணி பத்திரிகையை ரத்து செய்து மேற்படி காணிகளை விடுவிக்க இந்த அரசு முன்வரவேண்டும்.

இன்று புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு சொந்தமான காணிகளில் / கட்டிடங்களில் இராணுவம் வியாபாரம் செய்கிறது / சினிமா நடத்துகிறது இது அரச இராணுவத்தின் கடமையா?

கேப்பாபிலவு என்ற கிராமத்தினை ஓட்டுமொத்தமாக இராணுவம் ஆக்கிரமித்துள்ளது. மக்களினுடைய கிராமத்தை மக்களுக்கு வழங்கிவிட்டு இராணுவம் வேறு இடத்திற்கு உடன் செல்ல வேண்டும்.

கொக்குளாய் தொடக்கம் நாயாறு வரையான கரைவலைப்பாடுகளை அபகரித்தமை
10 இற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் மீனவர்களின் பரம்பரை பரம்பரையாக தொழில் செய்த நிலம் இன்று பறிபோயுள்ளது. 1984 ம் ஆண்டு யுத்தம் காரணமாக இவர்கள் வெளியேற்றப்பட்டார்கள் மீண்டும் அவர்கள் 2010 ஆம் ஆண்டில் அங்கு மீள்குடியேறியபோது அவர்களுடைய அனைத்து பாடுகளும் சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

முல்லை மாவட்டத்திற்குரிய பாடுகளை திருகோணமலையை சேர்ந்த அதிகாரிகள் எப்படி வழங்க முடியும். ஒரு உதாரணத்தை கூறலாம் செபமாலை வின்சன்ற் ஞானமணி என்பவரின் கரைவலைபாடு றுக்மன் றவேறா என்ற முல்லை பிரதேசத்துடன் தொடர்பற்ற ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் பொது மக்களுடைய 913 ஏக்கர் காணிகளை ராணுவம் ஆக்கிரமித்துள்ளது. அதேபோல் 5818 ஏக்கர் அரச காணிகளில் இராணுவம் நிலை கொண்டுள்ளது. இவற்றில் பலநூறு ஏக்கர் பிரதேச சபை, நகரசபை, அரச திணைக்களங்களுக்கு உரியதும் உள்ளடங்கும்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பொது மக்களுடைய 701 ஏக்கர் மற்றும் அரச திணைக்களங்களுக்கு உரிய 12845 ஏக்கர் காணிகளையும் இராணுவம் ஆக்கிரமித்துள்ளது.