சென்னையில் வெள்ளத்தில் மிதக்கும் விமானங்கள்: 20க்கும் மேற்பட்ட விமான சேவைகளும் ரத்து : பயணிகள் அவதி!!

628

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 2 தினங்களாக நிற்காமல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு கொழும்பு, சிங்கப்பூர், அபுதாபி, டெல்லி, மதுரை உள்பட பல பகுதிகளில் இருந்து வந்த 15 விமானங்கள் உடனடியாக தரை இறங்க முடியாமல் வானில் வட்டமிட்டன.

பின்னர் சுமார் 30 நிமிடங்களில் இருந்து 1 மணி நேரத்திற்கு பின் அந்த விமானங்கள் ஒன்றின் பின் ஒன்றாக தரை இறங்கின.

இதேபோல் சென்னையில் இருந்து சிங்கப்பூர், டெல்லி, மதுரை, திருச்சி, ஐதராபாத், கொச்சி, திருவனந்தபுரம் செல்ல வேண்டிய 15க்கும் மேற்பட்ட விமானங்கள் 1 மணியில் இருந்து 4 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளனார்கள்.

மேலும் விமானத்தின் ஓடுபாதையில் மழை நீர் தேங்கியிருப்பதாலும், பெய்து வரும் மழை காரணமாக ஓடுபாதை தெளிவாகத் தெரியாத நிலை இருப்பதாலும் சென்னையிலிருந்து புறப்படும் அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது தாமதப்படுத்தப்பட்டுள்ளன என்று விமான நிலைய இயக்குநர் தீபக் மிஷ்ரா தெரிவித்தார்.

மேலும் சென்னைக்கு வந்து சேரும் 20க்கும் மேற்பட்ட விமானங்களும் பெங்களூருக்கு அல்லது ஹைதராபாதுக்குத் திருப்பி விடப்படுகின்றன.

புதன்கிழமை காலை நிலைமை மறு பரீசலனை செய்யப்பட்டு அடுத்த நடவடிக்கைகள் திட்டமிடப்படும் என்று அவர் தெரிவித்தார்.

சென்னை விமானத்தின் ஓடுபாதையில் மழை நீர் தேங்கியிருப்பதால் லண்டன் மற்றும் ஜெர்மனியிலிருந்து சென்னை வரும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானங்கள் ஹைதராபாத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாகவும், நிலைமை சீரானவுடன பயணிகள் அனைவரும் சென்னைக்கு அழைத்துவர ஏற்பாடு செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று அதிகாலை ஆரம்பித்த அடைமழை இன்னும் இரு நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 2 3 4