வௌ்ளத்தில் தத்தளிக்கும் மீனம்பாக்கம் : சென்னையில் தற்காலிக விமான நிலையம்!!

705

Chennai Flood

தமிழகத்தில் பெய்யும் தொடர் கனமழை காரணமாக சென்னை விமான நிலையம் டிசம்பர் 6ம் திகதி வரை மூடப்பட்டுள்ளதை அடுத்து அரக்கோணத்தில் உள்ள ராஜாளி கடற்படை விமான தளம் தற்காலிகமாக பயணிகள் விமான நிலையமாக செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரு தினங்களாக இடைவிடாமல் மழை பெய்து வருவதால் பஸ் போக்குவரத்து, ரயில் போக்குவரத்துக்கள் முடங்கியுள்ளன. இதேபோல், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ஓடுபாதைகளில் தண்ணீர் குளம்போல் தேங்கியதால் விமான சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மீனம்பாக்கத்தில் உள்ள சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதைகள் முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ளது. தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், விமான நிலையத்தில் மழைநீர் அதிக அளவில் தேங்கும் அபாயம் உள்ளது.

எனவே, சென்னை விமான நிலையம் டிசம்பர் 6ம் திகதி வரையில் மூடப்படுவதாக இந்திய விமான ஆணையம் அறிவித்துள்ளது. சென்னை விமான நிலையத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரக்கோணத்தில் உள்ள ராஜாளி கடற்படை விமான தளம் தற்காலிகமாக பயணிகள் விமான நிலையமாக செயல்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதன் மூலம் குறைந்தபட்சம் பயணிகளின் சிரமத்தை சிறிதளவேனும் குறைக்க முடியும். வேலூர் மாவட்டம், அரக்கோணத்தில் உள்ள ராஜாளி மத்திய கடற்படையின் பயிற்சித் தளம் ஆசியாவிலேயே மிகப் பெரியது. இந்தியாவிலேயே மிகப் பெரிய ஹெலிகாப்டர் விமானிகள் பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது.

இதேவேளை, சென்னை விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால் நேற்றும் இன்றும் கொழும்பு – சென்னை பயணிக்கும் விமானங்கள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 2 3 4 5 6