வவுனியா அருந்ததி மண்டபத்தில் நடைபெற்ற மாகாண கடற்றொழிலாளர்களின் ஊடகவியலாளர் சந்திப்பு!!

934

இன்று காலை 11.00 மணியளவில் வவுனியா அருந்ததி மண்டபத்தில் மண்டபத்தில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் வட மாகாண கடற்றொழிலாளர்களின் இணையம் நாடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அன்டனி ஜேசுதாஸன் (வட கிழக்கு இணைப்பாளர் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம்), M.N.ஆலம் (வட மாகாண கடற்தொழிலாளர்களின் இணையத்தின் தலைவர்) , N.V.சுப்பிரமணியம்(செயலாளர், வ.மா.மீ.இ), A.மரியராசா(பொருளாளர், வ.மா.மீ.இ), பிரான்சிஸ் ஜோசப் ( விசேட பிரதிநிதி வ.மா.மீ.இ), பெண்கள் திட்ட இணைப்பாளர் (தே.மீ.ஒ.இ), இணைப்பாளர் மன்னார் மாவட்டம் ( தே.மீ.ஒ.இ) ஆகியோர் கலந்து கொண்டனர்.

வடமாகாண மீனவர்கள் முகம் கொடுக்கும் பிரச்சனைகளுக்கு முன்வைக்கும் தீர்வுகள் தொடர்பாக M.N.ஆலம் (தலைவர், வடமாகாண கடற்றொழிலாளர் இணையம்) அவர்கள் முன்வைத்த ஊடக அறிக்கை வருமாறு..

வடமாகாண கடற்றொழிலாளர் இணையமானது வடமாகாண மீனவர்கள் முகம் கொடுக்கும் தொழில், அவர்களின் வாழ்வாதாரம், கடல்வள பாதுகாப்பு போன்ற பிரச்சனைகள் இதனோடு இந்திய இழுவைப் படகுகள் எமது கடற்பரப்பில் அத்துமீறிய வருகையும் அவர்களின் தொழில் முறை அதனோடு தென்பகுதி பருவகால மீனவர்களின் மிதமிஞ்சிய வருகையும் தடைசெய்யப்பட்ட தொழில் முறையை பயன்படுத்தி அவர்களின் செய்யும் செயற்பாடுகள், இதனை விட உள்ளுர் மீனவர்களால் செய்யப்படும் கடற்றொழிலுக்கு பொருந்தாத சட்டவிரோத தொழில்கள் என பல தரப்பட்ட விடயங்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் தனது பணியினை தொடர்ந்து செய்து வருகின்றது.

இதில் சில விடயங்கள் அரசாலும் ஏனைய தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் இவைகளுக்கான தீர்வு இன்றுவரை கிடைக்கவில்லை. குறிப்பாக

இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய வருகையும் அவர்களின் தொழில் முறையும்

தென்னிந்திய மீனவர்களின் மித மிஞ்சிய வருகை

உள்ளுர் மீனவர்களின் தடை செய்யப்பட்ட தொழில் முறைகள்

மீனவருக்கான உட்கட்டமைப்பு வசதிகள்

மீனவர்களுக்கான வாழ்வாதார உதவிகளும், அவர்களின் தெழில் ஊக்குவிப்பு உதவிகள்

மீனவ காப்புறுதி

மீனவ ஓய்வூதியம்

மீன்பிடி துறைமுகங்கள் அபிவிருத்தி

மீனவ பெண் தலைமைத்துவ குடும்பங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்

கடல் முகாமைத்துவம்

இந்திய இழுவைப்படகுகளின் வருகைக்கு எதிராக பல நடவடிக்கைகளை வடமாகாண இணையமானது வடமாகாண மீனவர்களின் ஒத்துழைப்புடன் மேற்கொண்டது.

இதற்கு இன்று பல சாதகமான நகர்வுகள் அரசாலும், இந்திய துணைத் தூதுவராலயத்தாலும், எமது மீனவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதத்தில் நடைபெறுகின்றது.

இது இன்னும் விரைவுபடுத்தப்பட்டு முற்றாக நிறுத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தென்னிலங்கை மீனவர்களின் வருகை தொடர்பாக தொடர்ச்சியான பேச்சுக்கள் தென்னிலங்கை மீனவர் பிரதிநிதிகள் ஊடாக நடைபெற்று வருகின்றது. இதற்கான அனுசரனையை தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் வழங்கி வருகின்றது.

இவர்களின் வருகையை கட்டுப்படுத்த அரசும் எமது மீனவர்களின் நிலைப்பாட்டில் சாதகமாக வடமாகாண மீன்பிடி அமைச்சுக்கு இதனை கையாளும் பொறுப்பை வழங்கி உள்ளது.

உள்ளுர் மீனவர்கள் செய்யும் தடைசெய்யப்பட்ட தொழில் முறைகள் ஊடாக சிறு மீனவர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் கடற்றொழில் திணைக்களம் என்பன பக்கசார்பாக நடந்து கொள்வதால் இவ்வாறான தொழில் முறைகளை நிறுத்துவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இத்தொழிலை நிறுத்த மாவட்டங்கள் தோறும் உள்ள மீனவர் சங்கங்களும் விரைந்து செயற்பட வேண்டும். இல்லையேல் ஏனையவர்களும் இத்தொழிலுக்கு எதிர்காலத்தில் மாறிவிடுவர் என்பதனை சம்மந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே அரசு உடன் இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வடமாகாண மீனவ சமூகம் யுத்தத்தால், இயற்கை அனர்த்தத்தால், ஏனைய நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட சமூகம் என்ற அடிப்படையில் அவர்களுக்குக்கான அடிப்படை வசதிகளை வீட்டு வசதி, மலசலகூட உட்கட்டமைப்பு வசதிகள் அவர்களின் வாழ்வாதாரத்திற்கான உதவிகள், தொழில் முயற்சிக்கான உதவிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.

மீனவர்களுக்கு காப்புறுதி கடந்த அரசு காலத்தில் வருடாவருடம் புதுப்பிக்கும் விதத்தில் வருடம் ஒன்றுக்கு ரூபா 750.00 அறவிடப்பட்டு அது அவ்வருடமே காலவதியாகும் நிலையே இருந்து வந்தது.

இந்நடைமுறையை நாம் தொடர்ந்து எதிர்த்து வந்ததுடன் இயக்காப்புறுதியை ஆயுள் காப்புறுதியாக மாற்றப்பட வேண்டும். என்ற எமது கோரிக்கையை அரசு ஏற்று ஆயுள் காப்புறுதியாக்கப்பட்டு இதுவரை இருந்த இலப்பு தொகை ஒரு லட்சம் என்பதை பத்து லட்சம் என மாற்றபட்டதை நாம் எமது கோரிக்கையின் வெற்றியாக கருதுகின்றோம்.

அதேபோன்று ஓய்வூதிய திட்டம் மீனவர்களுக்கு பயன்தரக்கூடிய வகையில் மாற்றப்பட்டு கணிசமான தொகையினை மீனவர்களுக்கு ஓய்வூதியமாக வழங்க அரசு முன்வர வேண்டும்.

முற்றாக சிதவடைந்துள்ள வடபகுதி கடல் முகாமைத்துவம் மறுசீரமைக்கப்பட்டு மாவட்டத்திற்கு ஒன்று என்ற அடிப்படையில் மீன்பிடி துறைமுகம் அதே போன்று சிறு துறைமுகங்கள் மற்றும் வெளிச்ச வீடுகள், மீன்பிடி உபகரண உற்பத்தி தொழிற்சாலைகள், படகுகட்டும் உருவாக்கப்பட வேண்டும்.

அதில் அம்மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும்.

குடும்பத் தலைவர்களை இழந்து பெண்களை தலைமைத்துவமாக கொண்டு இயங்கும் மீனவர் குடும்பங்களின் தேவைகளான கல்வி, வீடு, தொழில் உபகரண உதவி அல்லது மாதாந்த உதவி தொகையிணை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவிட வேண்டும்.

பாக்கு நீரிணைப் பகுதியை பாதுகாக்கும் நோக்கில் அதில் அமைந்துள்ள கடல் வளங்களை எதிர்கால சந்ததியினருக்கு பயன்பெறும் வகையில் 2016ம் ஆண்டை பாக்கு நீரிணை முகாமைத்துவ ஆண்டாக அரசு பிரகடனப்படுத்த வேண்டும். அதற்கு வடமாகாணசபை உதவிட வேண்டும். இதற்கு இந்திய அரசும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

இறுதியாக அரசு சமர்ப்பித்துள்ள 2016ம் ஆண்டுக்காக பாதீடு வடபகுதி மீனவர்களுக்கு முழுமையான நிவாரணத்தை வழங்காவிட்டாலும் யுத்த அழிவு, இயற்கை அழிவு மற்றும் இந்திய இழுவைப்படகுகளின் ஊடாக கடல் மற்றும் உபகரண அழிவு நிறைந்த மாகாணமாக வடபகுதி கணிக்கப்பட்டு விசேடமாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்பதை அரசுக்கு வேண்டுதலாக முன்வைத்தனர்.

20151207_112302 20151207_112818 20151207_112928 20151207_113634 20151207_113902