
உணவகத்தை வித்தியாசமாக அமைக்கவேண்டுமென்றால் மலைகளுக்கு இடையிலோ, நீர் வீழ்ச்சிக்கு இடையிலோ அமைப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.ஆனால் கல்லறைகளுக்கு இடையே கட்டப்பட்டுள்ள உணவகத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா?இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ளது அகமதாபாத் நகரம். இந்நகரத்தில் உள்ள உணவகம் ஒன்று தான் கல்லறைகளுடன் வித்தியாசமாக செயல்படுகிறது.
நியூ லக்கி ரெஸ்டாரெண்ட் என்பது இதன் உண்மையான பெயராக இருந்தாலும் கல்லறை உணவகம் என்ற பெயரே இப்பகுதியில் பிரபலம்.மிகவும் பரபரப்பாக இயங்கும் இந்த உணவத்தில் இடை இடையே உள்ள கல்லறைகளை யாரும் கண்டுகொள்ளாமல் தாங்கள் ஆர்டர் பண்ணியதை வாங்கி ருசித்தபடி செல்கின்றனர்.
என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? முதலில் இந்த இடத்தில் இஸ்லாமிய கல்லறை இருந்துள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த இடத்தில் தனது உணவகத்தை கட்ட அதன் முதலாளி கிருஷ்ணன் குட்டி முடிவு செய்துள்ளார். எனினும் அங்குள்ள கல்லறைகளை இடிக்க அவருக்கு மனமில்லை. எனவே கல்லறைகளை இடிக்காமல் அதனை சுற்றி தனது உணவத்தை அமைத்துள்ளார்.
சுமார் 12 கல்லறைகள் வரை இந்த உணவகத்தின் உள்ளே அமைந்துள்ளது. இரும்பு வேலி அமைத்து இந்த கல்லறைகள் பாதுகாக்கப்படுகின்றன. தினமும் உணவத்தை திறக்கும் போதும் பின்னர் மூடும்போது உணவகத்தின் ஊழியர்கள் இந்த கல்லறைகளுக்கு மரியாதை செலுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.இங்கு வரும் வாடிக்கையாளர்களும் இது ஒரு புது அனுபவமாக இருப்பதாக கூறிகின்றனர்.





