இந்திய அரசின் 180 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கட்டப்பட்ட நோயாளர் விடுதி இன்று (11.12.2015) பிற்பகல் 2 மணியளவில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா, மத்திய சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ராஜித சேனாரத்ன, வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் ஆகியோர் இணைந்து பெயர்ப் பலகையினை திரைநீக்கம் செய்து வைத்தனர்.
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடத் தொகுதியை வைபவரீதியாக உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா திறந்து வைத்தார். அதிதிகள் புதிதாக அமைக்கப்பட்ட கட்டிடத் தொகுதியினை பார்வையிட்டனர்.
அதிதிகளை வரவேற்று வரவேற்பு நடனம் வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
தொடர்ந்து அதிதிகளின் உரைகள் இடம்பெற்றதுடன், விசேட அதிதிகளுக்கான நினைவுப்பரிசு வவுனியா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின் ஹா, மத்திய சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ராஜித சேனாரத்ன, வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை முதல்வர், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள், வவுனியா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன், மற்றும் வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதிய பரிபாலகர், தாதிய உத்தியோகத்தர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த விடுதியானது 200நோயாளர்களுக்கான படுக்கை வசதிகளைக்கொண்ட மூன்று மாடிக்கட்டிடமாகும்.






