வவுனியாவில் கடந்த வாரத்தில் 11பேர் டெங்கு தாக்கத்தினால் பாதிப்பு!!

539

Dengu

வவுனியாவில் கடந்த வாரத்தில் மட்டும் 11பேர் டெங்கு தாக்கத்திற்குள்ளாகியுள்ளதாக வவுனியா சுகாதார திணைக்கள மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் க.மேஜெய தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு மொத்தமாக 74பேர் டெங்கு தொற்றுக்குள்ளாகி பரிசோதனையினை மேற்கொண்டுள்ளதாகவும், கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் இந்த மாத இரண்டாம் வாரத்திலேயே அதிகளவான 11பேர் டெங்கினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த மேற்பார்வை பரிசோதகர் இன்று புதன்கிழமை டெங்கு நுளம்புகள் பெருக்கெடுக்கும் இடங்களை இனங்கண்டு அவற்றை வலயங்களாக பிரிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகளவாக நுளம்புகள் பெருக்கெடுக்கும் இடங்களில் நாளை பரிசோதனை மேற்கொள்வதுடன் உடனடி நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.

சுகாதார பொது பரிசோதகர்களுடன் பொலிசார், நகர சபை ஊழியர்கள் அனைவரும் இணைந்து டெங்கு நுளம்பு பெருக்கத்தை கட்டப்படுத்த நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளதாகவும் சகல பொது மக்கள் மற்றும் அரச திணைக்களங்கள் தமது முழுமையான ஒத்துழைப்பினை வழங்கி டெங்கு நுளம்பை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் தெரிவித்த மேற்பார்வை பரிசோதகர்,

தம்மால் மட்டும் டெங்கு நுளம்பினை கட்டுப்படுத்த முடியாது என்றும் பொது மக்களும் தமது ஒத்துழைப்பை வழங்குமாறும் தமது இடங்களை துப்பரவு செய்து மழை நீர் தேங்கி நிற்கும் பகுதிகளை இனங்கண்டு அவற்றை அகற்றி தமக்கு ஒத்துழைப்பினை வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களிலே டெங்கு நுளம்பு பெருக்கெடுப்பதாகவும் பொது மக்கள் அந்த நேரத்தில் பாதுகாப்பாக இருக்குமாறும் தெரிவித்துள்ளார்.