
இந்திய அரசாங்கத்தினால் வருடந்தோறும் பட்டப்படிப்புக்கான புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டபோதும் அவை தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு கிடைப்பதில்லை தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்களை இந்திய வம்சாவளியினர் என உறுதிப்படுத்தும் PIO,OIC சான்றுப் பத்திரங்களைக் கொண்டிராததன் காரணமாக இந்த வாய்ப்புகளை இழக்கின்றனர்.
இதனால் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு தனியான திட்டம் ஒன்றை வகுக்குமாறு இந்திய உதவி உயர்ஸ்தானிகருடன் சந்திப்பில் தான் வேண்டுகோள் விடுத்ததாக தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.
கண்டியில் உள்ள இலங்கைக்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர் ராதா வெங்கட்ராமனுடன் நேற்று இடம் பெற்ற சந்திப்பில் தான் இந்த வேண்டுகோளை முன்வைத்ததாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பெருந் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கென உயர்தரம் மற்றும் பல்கலைக்கழக பட்டப்படிப்பு ஆகியவற்றின்போது வழங்கப்படும் உதவி தொகையான புலமைப்பரிசில் பயன்பெறுனராக தான் இருந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
CEWT எனப்படும் அந்தத் திட்டத்தின் அடுத்த கட்டமாக தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் இந்தியா சென்று பட்டப்படிப்பை மேற் கொள்ளும் நிகழ்ச்சித்திட்டம் ஒன்று அவசியம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.





