
திருகோணமலை ஜயந்திபுர பகுதியில் ஏழு வயது சிறுமியொருவரை துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய ஒருவரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் ருவான் திஸாநாயக்க திங்கட்கிழமை உத்தரவிட்டார். ஜயந்திபுர, வான்எல, பகுதியைச் சேர்ந்த எம். விஜயரத்தின (வயது 53) என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவராவார்.
சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜயந்திபுர பகுதியில் கடைக்குச் சென்ற சிறுமியை அழைத்து குறித்த 53 வயதுடைய சந்தேக நபர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சிறுமியின் வீட்டின் அருகிலே சந்தேக நபர் தனிமையில் வசித்து வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து சந்தேக நபரை கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை கைது செய்து. ஜயந்திபுர பொலிஸார் மறு நாள் திங்கட்கிழமை கந்தளாய் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். சிறுமி வைத்திய பரிசோதனைக்காக கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் பற் றிய மேலதிக விசாரணைகளை சூரியபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.





