
சவூதி அரேபியாவில் தவறான பாலியல் உறவைப் பேணிய குற்றச்சாட்டின் பேரில் இலங்கைப் பணிப் பெண் ஒருவருக்கு எதிராக வழங்கப்பட்ட கல்லெறிந்து கொல்லும் மரணதண்டனை தீர்ப்பை அந்நாட்டு நீதிமன்றம் மூன்று வருட சிறைத்தண்டனையாக மாற்றியமைத்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சும் நேற்று அறிவித்தன.
நேற்றைய தினம் வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட வெளிவிவகார பிரதிய மைச்சர் ஹர்ஷ டி சில்வா,வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள ஆகியோரே இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.
கல்லெறிந்து கொல்லும் தண்டனையிலிருந்து குறித்த பெண்ணைக் காப்பாற்றும் வகையில் இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்த முயற்சிகளின் பலனாக இத் தீர்ப்பினை மீள்பரிசீலனைக்குட்படுத்திய சவூதி அரேபியாவின் தவாத்மி நீதிமன்றம் நேற்றுமுன்தினம் அதனை மூன்று வருட சிறைத் தண்டனையாக குறைத்துள்ளதாக அமைச்சர்கள் நேற்று தெரிவித்தனர்.
இவ் ஊடகவியலாளர் சந்திப்பில் வெளிவிவகார பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள ஆகியோர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,
இலங்கைப் பணிப் பெண்ணுக்கு எதிராக சவூதி அரேபிய நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக நாம் மேன்முறையீடு செய்ததுடன் சவூதியிலுள்ள இலங்கைத் தூதரகம் மூலமாக அப் பெண்ணைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வந்தோம். இதற்கமைவாகவே மரண தண்டனையிலிருந்து மூன்று வருட சிறைத் தண்டனையாக தீர்ப்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
குறித்த இலங்கைப் பணிப் பெண் கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றார். அந்த வகையில் அவர் ஏற்கனவே ஒன்றரை வருடங்களை சிறையில் கழித்துவிட்டார். எனினும் தற்போது வழங்கப்பட்டுள்ள 3 வருட சிறைத்தண்டனையில் மேற்படி ஒன்றரை வருடங்கள் கழிக்கப்படுமா அல்லது அவர் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்ட தினத்திலிருந்து 3 வருடங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டுமா என்பது இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை. இது தொடர்பில் எதிர்வரும் திங்கட் கிழமை எமக்கு தெளிவான தகவல் கிடைக்கும் என நம்புகிறோம்.
இவ்வாறான ஒரு தீர்ப்பு மீள்பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு மாற்றி வழங்கப்பட்டமை வரலாற்றில் இதுவே முதல் முதல் தடவையாகும். இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்குமிடையிலான இராஜதந்திர உறவு மிகவும் வலுவாக உள்ளது என்பதையே இந்தத் தீர்ப்பு வெளிப்படுத்தி நிற்கிறது. இதற்காக உழைத்த வெளி விவகார அமைச்சின் அதிகாரிகள், வெ ளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் அதிகாரிகள், சவூதியிலுள்ள இலங்கைத் தூதுவர் அஸ்மி தாஸிம், சவூதி அரேபிய சட்டத்தரணிகள் ஆகியோருக்கு நாம் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.
இந்த விடயம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் மிகக் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சவூதியிலுள்ள இலங்கைத் தூதுவர் கடுமையான விமர்சனங்களுக்குட்படுத்தப்பட்டார். எனினும் அவர் இது பற்றி அலட்டிக் கொள்ளாது குறித்த பெண்ணை தண்டனையிலிருந்து காப்பாற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார். அதற்காக நாம் தூதுவர் அஸ்மி தாஸிமுக்கு விசேட நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
கொழும்பைச் சேர்ந்த குறித்த பெண்மணி 2013 ஆம் ஆண்டு சவூதி அரேபியாவுக்கு வேலைவாய்ப்புப் பெற்றுச் சென்று அதே வருடம் தவறான பாலியல் உறவைப் பேணிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டார். 2014 இல் இவர் மீதான குற்றச்சாட்டுக்கள் உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





