வவுனியா நகர்ப் பகுதியில் சட்டவிரோதமாக வீதியை ஆக்கிரமித்து, வர்த்தகர்களின் கொட்டகையை வவுனியா நகரசபை அகற்றிய போது செய்தி சேகரித்துக் கொண்டிருந்த வவுனியா மாவட்ட ஊடகவியலாளரான பா.கதீசன் மீது வர்த்தகரொருவர் தாக்கியுள்ளார்.
இவர் வவுனியா நெற், சக்தி U-reporter போன்றவற்றின் சுதந்திர ஊடகவியாளர் என்பதுடன் வவுனியா தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் உறுப்பினரும் ஆவார்.
வவுனியா நகர்ப் பகுதியில் வர்த்தக நிலையமொன்று வீதியை ஆக்கிரமித்து கொட்டகையை அமைத்து வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தது.
இந்த நிலையில் வவுனியா நகரசபையினர் இக் கொட்டகையை அகற்றுமாறு கோரிய போதிலும் கொட்டகை அகற்றப்படாத நிலையில் இன்று வவுனியா நகரசபையினரால் கொட்டகை அகற்றப்பட்டது.
வவுனியா மாவட்ட செய்தியாளர்கள் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த போது வர்த்தக நிலையத்தில் இருந்து வருகை தந்த ஒருவர் ஊடகவியலாளர் ஒருவர் மீது தாக்கியுள்ளதுடன் அவருடைய புகைப்பட கருவியையும் களவாட முற்பட்டுள்ளார்.
இதனையடுத்து ஏனைய ஊடகவியலாளர்கள் தலையிட்டு ஊடகவியலாளரை மீட்டதுடன், வவுனியா பொது வைத்தியசாலையிலும் ஊடகவியலாளரை அனுமதித்துள்ளனர்.
இந்தநிலையில் ஊடகவியலாளர் அணிந்திருந்த சங்கிலியொன்றும் காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.







